"ஆக நாங்கள் ஆட்சிக்கு வந்தால்" - தி.மு.க-வின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட மறையாத வடுக்கள்!

Update: 2021-04-01 09:45 GMT

இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் தமிழக வரலாற்றை கிட்டதட்ட மாற்ற போகும் தேர்தல் இது எனவே கூறலாம். ஆம், இதுவரை அ.தி.மு.க அல்லது தி.மு.க என மட்டுமே கடந்த 60 ஆண்டுகளாக தமிழகம் பார்த்து வந்துள்ளது. இந்த நிலை நீடிக்குமா அல்லது மாறுமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் அறிவித்துவிடும்.

இப்படிப்பட்ட தேர்தலில் தன் வாழ்நாளில் முதன் முறையாக 67 வயதில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் காணுகிறார் தி.மு.க தலைவரும் வாரிசு அரசியல்வாதியுமான மு.க.ஸ்டாலின். தி.மு.க முதல்வர் பதவியை குறிவைத்து தேர்தலை சந்திப்பது புதிதல்ல. ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியை குறிவைத்து தேர்தலை சந்திப்பதுதான் புதிது.

நான் கருணாநிதியின் மகன் என கூறி கட்சி தலைவர் பதவியை பிடித்த இவர், அதே தலைவர் பதவியை வைத்துதான் முதல்வர் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறார். அப்படி ஸ்டாலின் முதல்வரானால் "இவைகள்" நடக்கலாம். இப்படி குறிப்பிட போகும் "இவைகள்" ஒன்றும் வரலாற்றில் புதிதல்ல மறைந்த தி.மு.க தலைவரும், இன்றைய தி.மு.க தலைவர் ஸ்டாலினின் தகப்பனாருமாகிய கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடந்தேறி மக்கள் மனதில் வடுக்களாய் மாறியுள்ளவைகள்தான்.

ஸ்டாலின் முதல்வரானால் "இவைகள்" நடக்கலாம்

1) ஒரு கட்சி செய்த தவறுக்காக ஒரு சட்டமே இயற்றப்பட்டது என்றால் அது தி.மு.க-வால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட "நில அபகரிப்பு" சட்டமே ஆகும். தி.மு.க பதவியில் இருந்த பொழுது தன் அதிகாரத்தை காட்டி மிரட்டி பிடுங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்களால் பதிவான புகார்கள் மட்டும் இரண்டு மாதங்களில் நான்காயிரத்தை தாண்டியது.

ஏன் இன்றும் தி.மு.க மந்திரிகள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை நிலம் பிடுங்கிய வழக்குகள் நீதிமன்றனத்தில் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. புகார்களும் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. தி.மு.க ஆட்சியை விட்டு இறங்கி பத்து ஆண்டுகளாகிவிட்டன என்பது இங்கே குறிப்பிடதக்க ஒன்று.

ஏன் இன்றைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க பட்டத்து இளவரசர் உதயநிதியின் மீதே சேஷாத்திரி என்பவர் நில அபகரிப்பு புகார் கொடுத்திருந்தார். அந்தளவிற்கு தி.மு.க நில அபகரிப்பு விவகாரத்தில் புகழ் பெற்றது.

2) அடுத்ததாக, திரையுலகம் தி.மு.க-வின் வாரிசுகளால் துவங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே படங்களை தயாரிக்க இயலும் என்ற நிலை, மேலும் இவர்களை தாண்டி படங்கள் தயாரித்தால் தியேட்டர்கள் கிடைக்காது என்ற நிலை, மேலும் இவர்களது படங்களை தவிர மற்ற படங்களுக்கு முக்கியத்துவம் தரும் நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லாமை, மிரட்டல் போன்ற சம்பவங்கள் இப்படி திரையுலகத்தை ஆட்டி படைத்தது தி.மு.க ஆட்சி.

இவ்வளவு ஏன் இன்று தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு "தல" என போற்றி புகழப்படும் அஜித் குமார் அவர்களே "மிரட்டுறாங்கய்யா" என கருணாநிதி முன்னிலையில் கூறியதை விடவா உதாரணம் வேண்டும்? ஆனால் இதெல்லாம் சரி செய்ய வேண்டிய முதல்வரோ "பாசத்தலைவனுக்கு பாராட்டு" விழாவில் மற்றவர் புகழ அதனை மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருந்தார்.

3) ஈழத்தமிழர் விவகாரத்தை சிறப்பாக கையாண்டிருக்க தி.மு.க-வால் முடியும் ஏனெனில் 2004-ஆம் ஆண்டு 40 தொகுதிகளையும் வென்று காங்கிரஸ் ஆட்சியமைக்க பெரும் உதவியாக இருந்தது தி.மு.க அதற்கு பிரதிபலனாக தமிழர் நலனை கேட்காமல் மகள் கனிமொழிக்கு, மகன் அழகிரிக்கு, பேரன் தயாநிதிக்கு, ஆ.ராசாவிற்கு என அனைவருக்கும் முக்கிய மத்திய மந்திரி இலாக்காக்கள் வாங்க சக்கர நாற்காலியிலும் டெல்லி வரை சுழன்றார் கருணாநிதி. ஆனால், ஈழத்தமிழர் விவகாரத்தில் இரண்டு மணி நேரம் மனைவி, துணைவி, நான்கு ஏர் கூலர்கள் சகித போராட்டமே போதுமானதாக இருந்தது முத்தமிழறிஞருக்கு.

4) இவை தவிர இரண்டு ஏக்கர் நிலம் என பொய் வாக்குறுதி, நெல்லை தி.மு.க எம்.எல்.ஏ ஒரு பல்கலைக்கழக துணை வேந்தரை பளார் என அறைந்தது, பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி போன்ற ரவுடிகளின் ராஜ்ஜியம், திருநெல்வேலியில் இரு அமைச்சர்கள் முன் காவல்த்துறை இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ரவுடிகளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், வாரிசு சண்டையில் தினகரன் அலுவலகம் தீ வைத்து எரித்ததில் மூவர் கொலை என அட்டூழியங்கள் ஏராளம்.

5) மேலும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களை தூண்டிவிட்டு போலீசார் கண்முன்னே கலவரம் செய்தது, சென்னை அண்ணா சாலையில் செக்கர்ஸ் ஹோட்டலை சன் குழுமத்தினர் அடித்து நொறுக்கியது, 2009-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்துக்குள்ளே போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் கலவரம் என தமிழகம் இருண்ட காலமாக இருந்தது. போதாக்குறைக்கு மின்வெட்டு வேறு மக்களை சிரமம் கொள்ள வைத்து பல தொழிலாளிகளை திண்டாட விட்டது. இன்றைக்கு சிறுபான்மையிரின் பாதுகாவலன் என மார்தட்டும் தி.மு.க-வால் சாதிக்பாட்சா என்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உயிர் போனதே, அப்பொழுது தி.மு.க பாதுகாவலன் இல்லையா?

இப்படிபட்ட ஆட்சியை 2006 முதல் 2011 வரை தந்துவிட்டு, இப்பொழுது மட்டும் நல்லாட்சியை எப்படி தி.மு.க-வால் தர இயலும்? அதிலும் கருணாநிதிக்கு பிறந்த ஸ்டாலின் அவரின் மகன் எனக்கூறி பதவியை பிடித்த ஸ்டாலின், மேடைகளில் இதனை பெருமை பொங்க கூறும் ஸ்டாலினால் எப்படி கருணாநிதியின் சுவடுகள் இல்லா ஆட்சியை தர இயலும்?

ஒருவேளை தி.மு.க ஆட்சியமைந்தால் மேற்கூறிய "இவைகள்" மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் நடந்தேறலாம்.

Similar News