சீன வலையிலிருந்து தப்பிக்கும் நேபாளம்? இந்தியா பக்கம் சாய்கிறதா?

சீன வலையிலிருந்து தப்பிக்கும் நேபாளம்? இந்தியா பக்கம் சாய்கிறதா?

Update: 2020-11-28 06:45 GMT

ஆசியாவின் இரு பழம்பெரும்  நாடுகளான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மே மாதத்திலிருந்து நிகழ்ந்து வரும் மோதல் பதற்றம், ஹிமாலயப் பகுதிகளை ஒரு ராணுவ பதற்றங்கள் நிறைந்த பகுதியாக மாற்றியுள்ளது. 

இதன் உச்சகட்டமாக, ஜூன் மாதத்தில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையில் நிகழ்ந்த கடும் மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். எண்ணிக்கை தெரியாத அளவுக்கு சீனப் படையினரும் உயிரிழந்தனர்.

இதற்கிடையில் நேபாளம் இதுதான் தங்களுடைய செல்வாக்கை காட்ட சரியான நேரம் என்று நினைத்தோ என்னாவோ, சீனாவின் வலையில் விழுந்தது. இந்து நாடான நேபாளத்தில், கம்யூனிஸ்ட் ஆட்சி சீனாவிற்கு ஆதரவாக மாறி இந்தியாவிற்கு எதிரான பல முடிவுகளை எடுத்தது.

 இதன் காரணமாக கலாச்சாரத்தால் ஒன்றிணைந்த இந்தியாவிற்கும் நேபாளத்துக்கு இடையே மோதல்கள் ஏற்பட தொடங்கியது. ஆனால் சமீபத்தில் நேபாளத்தின் பிரதமர் ஷர்மா ஓலி ஆட்சி, தனது முட்டாள் தனத்தை உணர்ந்ததாக தெரிகிறது. அதனால் மறுபடியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்து விலகி இந்தியா பக்கம் சாய்ந்து வருகிறது. 

 இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக நேபாளம் இருப்பதால், அங்கே இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் செல்வாக்கை காட்டத் தொடங்கியுள்ளனர். நேபாளத்தை வென்றெடுப்பதற்காக இரண்டு நாடுகளும் தங்கள் முயற்சிகளை அடுத்தடுத்து எடுத்து வருகின்றன. ஆனால் ஒரு வழியாக நேபாளம் இந்தியாவிற்கு சாதகமாக சாய்ந்து இருப்பதாக தெரிகிறது.

 சமீபத்திய வாரங்களில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே தொடர்ச்சியாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் சந்திப்புகள் நடந்துள்ளன. இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸ் ஷ்ரிங்லா, நேபாள பிரதிநிதி, பிரதமர் ஓலி, நேபாள ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் என பலரையும் சந்தித்தார்.

 பிரதமர் ஓலி, இந்திய-நேபாளம் இருதரப்பு உறவில் இதே வேகத்தை வளர்த்துக்கொள்ளவும், இருதரப்பு ஈடுபாட்டின் அளவை அதிகரிக்கவும் விருப்பமுடன் இருப்பதாக தெரிவித்தார். சர்ச்சைக்குரிய எல்லை பிரச்சினையையும் இரு தரப்பினருக்கும் இடையிலான விவாதத்திற்கு வந்தது. இது குறித்து நேபாளம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "இந்திய-நேபாளம் என இரு தரப்பினரும் எல்லை விஷயங்களில் தங்கள் வாதங்களை பகிர்ந்து கொண்டனர். இருதரப்பு வழிமுறைகளில் அதை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வழிகள் பற்றி விவாதித்தனர்" என்று வெளியிட்டுள்ளது.

 கடந்த மாதத்தின் கடைசியில் இந்தியாவின் உளவுத்துறை (RA&W) தலைவர் நேபாளத்திற்கு சென்று வந்தார். அங்கே பிரதமர் ஓலியை சந்தித்தார். நேபாளதுடனான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளில் வேறு யாரும் தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என்றும், நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும் என்றும் அவருக்கு உறுதி அளித்தார்.

 இதுமட்டுமல்லாமல் இருதரப்பு உறவுகளை மீட்டமைக்க இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் நாரவனே நேபாளத்திற்கு அதற்கு முன்னதாகவே சென்று வந்தார்.  இந்த சந்திப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. நேபாள இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை நாரவனேவுக்கு நேபாள ஜனாதிபதி வழங்கினார்.

இதன் விளைவாக நேபாளத்தின் சீன-ஆதரவு பாதுகாப்பு மந்திரி ஈஸ்வர் போக்ரேல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு மிடையிலான ராணுவ உறவுகள் குறித்து தேவையற்ற சீன சார்பான நிலைப்பாட்டின் காரணமாக இருந்தவர் போக்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந்தியாவுடன் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்பதை ஒரே காரணமாக கொண்ட ஒரு புவியியல் புத்தகத்தை கூட நேபாள அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இப்புத்தகத்தில் தான் இந்தியாவின் பகுதிகளை நேபாளத்தின் பகுதிகளாக அவர்கள் காட்டி இருந்தனர். விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்த பொழுது, புதிதாக இந்தியப் பகுதிகளை சேர்ந்த நேபாள வரைபடத்தை ஓலி வெளியிடாதது ஒரு சாதகமான விஷயமாக இந்தியாவினால் கருதப்பட்டது.

 இந்த விவகாரங்கள் சீனாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சீனா, நேபாளத்தின் உடனான தன் உறவை மீண்டும் வழிக்குக் கொண்டு வருவதற்கு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நேபாளத்திற்கான சீன தூதுவர் செவ்வாய்க்கிழமையன்று ஓலியை சந்தித்தார்.

 இந்த சந்திப்பு இரண்டு மணிநேரங்கள் நடந்ததாகவும் இது பெரும்பாலும் இந்தியாவுடைய செல்வாக்கை நேபாளத்தில் கட்டுப்படுத்துவதற்காக சீனாவால் எடுக்கப்பட்ட முயற்சி என்றும் கருதப்படுகிறது. ஆனால் இந்த முறை சீனாவிற்கு அது எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

 ஏனெனில் நேபாளத்தின் எல்லை பகுதிகள் உள்ள பல இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது சில மாதங்களாகவே வெளிச்சத்திற்கு வந்தது. கிட்டத்தட்ட 4 நேபாள மாவட்டங்களில் 11 இடங்களை ஆக்கிரமித்து உள்ளது. இவ்வாறு ஆக்கிரமித்துள்ள இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஏனெனில் அவை ஆற்றுப்படுகைகளில் உள்ளன.

 இதன் காரணமாகவே சீனாவின் அதிகப்படியான செல்வாக்கிற்கு நேபாளம் தற்போது தலை சாய்க்க மறுக்கிறது. இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தி அதன் மூலம் எளிதாக நேபாளத்தில் செல்வாக்கை வளர்க்கலாம் என்று நினைத்த சீனாவின் முயற்சியில் தற்பொழுது ஒரு தடை ஏற்பட்டுள்ளது. நேபாள மக்களும், நேபாள ஊடகங்களும் கூட இந்தியாவிற்கு சார்பான நிலைப்பாடுகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News