கொள்ளையர்களின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட கோவில் - எங்கே இந்த அதிசயம்.?

கொள்ளையர்களின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட கோவில் - எங்கே இந்த அதிசயம்.?

Update: 2020-12-07 17:59 GMT

மத்திய பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கின் அடர்ந்த வனப்பகுதியில் 1200 ஆண்டுகள் பழமையான படேஸ்வர் கோயில் வளாகத்தின் மறுசீரமைப்பு பணிகள் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) மறுசீரமைப்பு திட்டத்தை மிக விரைவில்‌ மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. 

கோயில் வளாகம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள குஜ்ஜார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டு இருப்பதால் விரைவில் சீரமைப்பு பணிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதிஹார வம்சத்தால் கட்டப்பட்டதாகக்‌ கருதப்படும் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் 1924ஆம் ஆண்டில் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் ‘பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக’ அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 200 கோயில்களைக் கொண்டிருக்கும் இந்த வளாகத்தை மீட்டெடுக்கும் பணியை 2004 ஆம் ஆண்டு வரை தொடங்க முடியவில்லை. 

பின்னர் 2005 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற கே.கே. முகமது தலைமையிலான தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு இந்த கோவிலை மீட்கும் மகத்தான பணியில் ஈடுபட்டது. பல்வேறு தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகளைக் கொண்ட இந்த கோவில் பூகம்பத்தால் இடிந்திருக்கலாம் என்றும் முகம்மதிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும் இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.

ஆய்வாளர் முகமது கோவில் இடிபாடுகளில் உள்ள கற்களை ஒன்றாக இணைத்து கோவில் கட்டமைப்பை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். பராமரிப்பின்மையால் எஞ்சி இருந்த கோவில் சுவர்களும் கூரைகளும் இடிந்து விழுந்ததோடு, செடிகள் முளைத்தால் சில ஆலயங்களின் அஸ்திவாரமே உடைந்து போய் வெறும் கற் குவியல்களாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குழு பல்வேறு மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பழங்கால கோவில்களின் இழந்த மகிமையை மீட்டெடுக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக உழைத்தது. இது வரலாற்றில் மிக முக்கியமான தொல்பொருள் மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த மறுசீரமைப்பு பணிக்கு முக்கியத் தடையாக இருந்தது சம்பல் பள்ளத்தாக்கில் இருந்த கொள்ளையர்கள். ஆனால் ஆய்வாளர் முகமதுவின் முயற்சியால் கொள்ளைக்காரர்களுடன் ஒரு கையெழுத்திடப்படாத அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு பணிகள் நல்ல முறையில் நடந்தன. முதல் முறை முகமது கோவிலுக்குச் சென்ற போது கொள்ளைக் கூட்டத் தலைவன் கோவில் வாசலில் அமர்ந்து பீடி குடித்துக் கொண்டு இருந்திருக்கிறான்.

அதைப் பார்த்து கோபப்பட்ட முகமது, "ஒரு புனிதத் தலத்தில் இப்படியா நடந்து கொள்வது?" என்று கண்டித்திருக்கிறார். பின்னர் உடன் சென்றவர்கள் உண்மையை எடுத்துக் கூறிய பின், கோவில் எவ்வாறு கொள்ளைக் கூட்டத் தலைவனின் முன்னோர் குஜ்ஜார் இனத்தாரால் கட்டப்பட்டது என்று நம்ப வைத்து, மறுசீரமைப்பு பணிக்கு ஒத்துழைக்க வைத்திருக்கிறார். அதன் பின்னர் கொள்ளையர்கள் ASI பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பல இடங்களில் கோவில்களில் உள்ள கலைப் பொக்கிஷங்கள் கடத்தப்பட்ட போதும் சம்பல் பள்ளத்தாக்கில் காட்டின் நடுவில் இருக்கும் படேஸ்வர் கோவில் தப்பி விட்டது. இதற்கு கொள்ளைக்காரர்கள் மீது இருந்த பயமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும் தற்போது மணல் கொள்ளை மாஃபியாக்கள் கோவிலுக்கு ஆபத்தாக அமைந்துள்ளனர். எனவே குஜ்ஜார் மக்கள் கோவில் முழுமையாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: 

https://www.hindustantimes.com/india-news/asi-to-resume-restoration-of-bateshwar-temple-complex-in-chambal/story-kBaxGfcRWVsrNbw3Vw8dLN.html 

https://www.prnewswire.com/news-releases/bateshwar-temples-of-madhya-pradesh---a-stupendous-feat-of-restoration-301141593.html 

Similar News