மூன்று மூர்த்திகள் மூன்று தீர்த்தங்கள் மூன்று தல விருட்சங்கள் உள்ள ஆலயம் எது தெரியுமா?- அறிவோம் ஆன்மீகம்!
மூன்று தீர்த்தங்கள் மூன்று தாயார் மூன்று தல விருட்சங்கள் 3 மூர்த்திகள் உள்ள திருவெண்காடு திருத்தலத்தை பற்றி காண்போம்.;

நாகை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்த திருத்தலம் திருவெண்காட. இத்தலத்திற்கும் மூன்று என்ற எண்ணிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இத்தலத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்,அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்கள் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களில் நீராடி முறையை இத்தலத்து மும்மூர்த்திகளை வழிபடுபவர்களுக்கு பிள்ளைப்பேறு கிட்டும். திருஞான சம்பந்த பெருமாள் இந்த திருவெண்காட்டு மூன்று தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுபவர்க்கு எந்த தீவினைகள் இருந்தாலும் விலகி ஓடிவிடும் என்றும் தீவினைகள் அண்டாது என்றும் குறிப்பிடுகிறார்.
இத்தலத்தில் மூன்று மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன. அவை ஆலமரம், கொன்றை மரம், வில்வமரம். இங்குள்ள ஆலமரம் அட்சய வடம் என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டு கயாவிலுள்ள அட்சய வடத்திற்கு இணையாக இது போற்றப்படுகிறது. கயாவில் அட்சய வடத்திற்கு கீழ் விஷ்ணு பாதம் இருப்பது போல இங்கு ருத்ரபாதம் உள்ளது. இதில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் சிவலோகம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இந்த திருவெண்காட்டில் வெண்காட்டீசர் என்ற சிவலிங்க மூர்த்தி, அகோரர் என்ற உக்கிர மூர்த்தி, ஆதி சிதம்பரேசர் என்னும் ஆனந்த தாண்டவ நடராஜர் ஆகிய மூன்று மூர்த்திகள் உள்ளனர். அம்பிகை, அகோர காளி துர்க்கை ,பிரம்ம வித்யா ஆகிய மூன்று கோலங்களில் காட்சி தருகிறாள். மூன்று தீர்த்தம் மூன்று மூர்த்தி மூன்று தாயார் மூன்று தல விருட்சங்கள் என மும்மையால் பொலிவு பெற்று திகழ்கிறது திருவெண்காட்டுத் திருத்தலம்.