விவசாயிகள் யாரும் உரங்களை பதுக்க வேண்டாம் - பரவி வரும் வதந்திக்கு மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம்!
Mansukh Mandaviya debunks Rumours of Fertilizer Shortage
By : Muruganandham
நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான வதந்திகளுக்கு, மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர், நவம்பர் மாதத்திற்கான உர உற்பத்தி இலக்கு குறித்து அதிகாரிகாரிகளுடன் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவையை விட, உற்பத்தி அதிகமாக இருக்கும். யூரியா உரத்தின் தேவை 41 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில், 76 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யப்பட உள்ளது.
அதேபோன்று, டிஏபி உரம் 17 லட்சம் மெட்ரிக் டன் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 18 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. என்பிகே உரங்கள் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தேவைப்படும் நிலையில் 30 லட்சம் மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட உள்ளது.
விவசாயிகள் யாரும் உரங்களை பதுக்க வேண்டாமென மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். வதந்தி கிளப்புவோருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வதந்திகளை கேடயமாக பயன்படுத்தி, கள்ளச்சந்தையில் உர விற்பனையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்று உறுதி அளித்துள்ள அவர், விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரவதாகவும் தெரிவித்துள்ளார்.