கந்தகார்: இசை, பெண் குரல்களை ஒலிபரப்பத் தடை விதித்த தலிபான்கள் !
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களில் இசை மற்றும் பெண் குரல்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
By : Saffron Mom
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களில் இசை மற்றும் பெண் குரல்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு சில ஊடகங்கள் தங்கள் பெண் அறிவிப்பாளர்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது. காபூலில் உள்ள உள்ளூர் ஊடகங்களின் தகவலின் படி, பல பெண் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தலிபான்கள் பெண்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிப்பதாகவும், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் படிக்க அனுமதிப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.
தாலிபான்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக, பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகள் காட்டுகின்றன.
இந்நிலையில் TOLO செய்திகள் நிருபர் வெளியிட்ட தகவலில், ஆப்கானிஸ்தான் தற்காலிக கல்வி அமைச்சர், பெண்களும் ஆண்களும் தனித்தனியாக தான் கல்வி கற்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாகக் கூறுகிறார். பலரும் அதன் கமெண்டுகளில், முதலில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இரண்டாவது முறை ஆட்சி அமைக்கப் போகும் தலிபான்கள் தாங்கள் மிகவும் மிதமான நிர்வாக அணுகுமுறையை பின்பற்றலாம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்தாலும், ஷரியா சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஷரியா சட்டம் என்றால் என்ன?
இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றுபவர்களின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்தும் கட்டளைகளின் தொகுப்பாக ஷரியா உள்ளது. இது குர்ஆனில் இஸ்லாத்தின் பல்வேறு கோட்பாடுகள், முகமது நபியின் வாழ்க்கையின் பதிவுகள் பொதிந்துள்ள போதனைகளையும் உள்ளடக்கியது. ஷரியாவுக்கென்று தெளிவான வரையறுக்கப்பட்ட சட்டங்கள் இல்லை.
குர்ஆன் மதகுருமார்கள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் ஆகியோரின் பல்வேறு விளக்கங்களுக்கு இது மாறுபடுகிறது. பல்வேறு விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
1996 முதல் 2002 வரை தலிபான்கள் சரியாக மிகத்தீவிரமான ஷரியாவின் விளக்கங்களை செயல்படுத்தினார்கள். பொது மரணதண்டனை மற்றும் உறுப்பு அங்கங்களை வெட்டுதல், இசை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்தல், தங்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றிய தவறிய ஆண்களை (உதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை செய்வது) அடிப்பது போன்றவை.
ஷரியாவின் சில விளக்கங்களின் கீழ் பெண்களுக்கும் ஆண்களைப் போலவே நான் சட்ட மற்றும் நிதி உரிமைகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாக இருந்த தலிபான் ஆட்சியில் இத்தகைய விளக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதற்கு முன்னால் இருந்த ஆட்சியில் பெண்கள் கிட்டத்தட்ட வீட்டு காவலில் வைக்கப்பட்டு ஒரு ஆண் உடன் சென்றால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். எந்த வேலையோ அல்லது கல்வியோ கற்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எட்டு வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பாக பர்கா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.
உயர்ந்த குதிகால் ரொம்ப செருப்புகளை அணியக்கூடாது. பெண்களை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டது. கடைகள், புத்தகங்கள், வீடுகளில் பெண்கள் புகைப்படங்கள் காட்டுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய விதிமுறைகளை மீறிய பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. பொது இடங்களில் சவுக்கால் அடிப்பது, கல்லெறிவது உட்பட. சில வழக்குகளில் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.
பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் பல்கலைகழக அளவில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் மேம்போக்காக தெரிவித்திருந்தாலும், தங்கள் வேலை இடங்களை விட்டு வெளியே அனுப்பப்பட்ட பெண்களைக் குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
Cover Image Courtesy: New York Times