Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : தமிழர்களால் மீட்கப்பட்ட லட்சத்தீவை பாதுகாக்கும் மத்திய அரசு..!

சிறப்பு கட்டுரை : தமிழர்களால் மீட்கப்பட்ட லட்சத்தீவை பாதுகாக்கும் மத்திய அரசு..!
X

OmprakashBy : Omprakash

  |  3 Jun 2021 2:24 PM IST

36 தீவுகளை உள்ளடக்கியது லட்சத்தீவு. மொத்த பரப்பளவு 32.62 சதுர கிலோ மீட்டர். மாநிலத் தலைநகரம் காவரட்டி. இயற்கை எழில் மிகுந்த லட்சத்தீவில், மொத்தமாக 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். அங்கு தொலைத் தொடர்பு சேவை என்பது மிகவும் குறைவு. பி.எஸ்.என்.எல். (BSNL) மற்றும் ஏர்டெல் (Airtel) என்ற இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே உள்ளது. அதிலும், பி.எஸ்.என்.எல் மட்டுமே பல இடங்களில் உள்ளது. ஏர்டெல், காவரட்டி மற்றும் அகாட்டி தீவுகளில் மட்டுமே உள்ளது.

லட்சத்தீவிற்கு அந்த யூனியன் பிரதேச நிர்வாகம், அனுமதி கொடுத்தால் மட்டுமே மற்றவர்கள் செல்ல முடியும். மற்ற ஊர்களுக்கு செல்வது போல் எவரும் அங்கு தாங்கள் விரும்பிய நேரத்திற்கு செல்ல முடியாது.

1956 ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு லட்சத்தீவு என பெயரிடப்பட்டது.

2011 மக்கள்தொகை கணக்கு எடுப்பின் படி, லட்சத்தீவில் உள்ள மொத்த மக்கள் தொகை 64 ஆயிரத்து 429 பேர். தற்போது 70 ஆயிரம் வரை இருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது. அதில் 93 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அங்கு உள்ள மொத்த பூர்வகுடி மக்களுமே, பழங்குடியினர் (Scheduled Tribes) ஆகக் கருதப்படுவார்கள். அங்கு வாழும் பூர்வகுடி பழங்குடியினர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பழங்குடி மக்கள் (S.T.) என கருதப்படுவார்கள். அங்கு வாழும் மக்களுக்கு பிரதான தொழில் மீன் பிடித்தல், தென்னை மரங்கள் வளர்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை.

தமிழர்களால் மீட்கப்பட்ட லட்சத்தீவு:

பாகிஸ்தான் நமது நாட்டிற்கு, எப்போதும் தொந்தரவு செய்வதிலேயே, குறியாக இருந்தது. அதற்கு ஏற்றார் போல கிழக்குப் பகுதியில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தான் இருந்தது. தற்போது அது வங்காள தேசம் (பங்களாதேஷ்) என அழைக்கப்படுகின்றது. மேற்கில் இந்திய எல்லைக்கு, மிக அருகில் தன்னுடைய நிலப்பரப்பை வைத்துள்ள பாகிஸ்தான், எப்போதும் நமது நாட்டிற்கு, ஏதாவது தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும். மேலும், தனது தொந்தரவை அதிகப் படுத்தும் நோக்கத்தில், இந்திய கடலோரப் பகுதியில் தெற்கே, அரேபிக் கடலோரம் அமைந்து உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவை, தன்னோடு இணைக்க விரும்பியது. அதைக் கையகப் படுத்த எண்ணி, ஒரு கப்பலை, பாகிஸ்தான் அரசு, தன்னுடைய நாட்டின் கொடியுடன், 1947 ஆம் ஆண்டு, நாடு விடுதலை அடைந்த பின்னர் அனுப்பியது.

இதனை உணர்ந்த, அன்றைய உள்துறை அமைச்சர், திரு சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க துணிந்தார். ஆற்காடு சகோதரர்களான ராமசாமி முதலியார் மற்றும் லக்ஷ்மன் சுவாமி முதலியார் இருவருடன் தொடர்பு கொண்டு, லட்சத்தீவில் நமது நாட்டு தேசியக் கொடியை ஏற்றுமாறு கூறினார். உடனே, ஆற்காட்டு முதலியார் சகோதரர்களும், லட்சத்தீவில், நமது நாட்டு தேசியக் கொடியை ஏற்றி, லட்சத்தீவு இந்தியாவுடன் சேர்ந்தது என்பதை குறிப்பால் உணர்த்தினார்கள். சர்தார் பட்டேல் அவர்கள், ஆற்காடு முதலியார் சகோதரர்களை தொடர்புக் கொண்டு, லட்சத்தீவில் மேலும் பல வசதிகளை செய்து தருமாறு கூறினார்.

தற்போது லட்சத்தீவு நம்முடன் இருப்பதற்கு அன்று ஆற்காடு முதலியார் சகோதரர்கள் செய்த, உடனடி செயல்களே காரணம் என பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மாதம் தோறும் ஒளிப்பரப்பாகும் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி, 2019 அன்று தெரிவித்தார்.

காந்தி சிலையை அவமதித்த லட்சத்தீவு மக்கள்:

மகாத்மா காந்தி அவர்களின் சிலையை, தலைநகரான கவாரட்டியில் நிறுவ எண்ணி, 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கொச்சியில் இருந்து கொண்டு வந்தார்கள். இஸ்லாமியர்களின் மனது புண்படும் என்பதால் சிலையை நிறுவ உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிலையை நிறுவினால், மாலை போடப்படும். அது, தங்களுடைய மத வழிபாட்டுக்கு எதிராக அமையும் என்பதால், அங்கு வாழும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காந்தி சிலை, இன்றும் நிறுவப்படாமலே உள்ளது.

லட்சத்தீவு மாவட்ட ஆட்சியர் S ஹஸ்கர் அலி மே 30, 2021 அளித்த பேட்டி:

"லட்சத்தீவு மேம்பாட்டுப் பணிகளை, நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக திட்டமிட்டு செய்ய இருக்கின்றோம்" எனவும், "சட்டத்திற்கு எதிரான செயல்களை செய்பவர்களே, தற்போது எதிர்க்கின்றார்கள்" எனவும், லட்சத்தீவுகளுக்கு வெளியே சுயநல சக்திகள் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் லட்சத்தீவுகளில் அமைதி நிலவுகிறது. நாங்கள் என்ன செய்தாலும் அதை ஜனநாயக நடைமுறைகள் வழியாகவே செய்வோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மது விற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. உள்ளூர் மக்களுக்கு அல்ல. இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்க கடும் சட்டம் தேவைப்படுகிறது. எனவே குண்டர் தடை சட்டத்துக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1,000 சுற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. போதைப் பொருள், மதுபானம் கடத்தல் மற்றும் பாசோ சட்ட வழக்குகளும் லட்சத்தீவுகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன", என லட்சத்தீவின் மாவட்ட ஆட்சியர் S ஹஸ்கர் அலி, கொச்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தற்போது செய்யப்பட இருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள்:

லட்சத்தீவில் சட்ட மன்றம் கிடையாது. மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சத்தீவில், தன்னுடைய பிரதிநிதியாக திரு பிரபுல் கோடா பட்டேல் அவர்களை, டிசம்பர் 5 2020 அன்று குடியரசுத் தலைவர் நியமித்தார். டையூ - டாமன், தாத்ரா ஹவேலி யூனியன் பிரதேசங்களுடன் கூடுதலாக லட்சத்தீவையும் கவனிக்குமாறு நியமிக்கப்பட்டார்.

அரேபிக் கடலோரம் அமைந்துள்ள பகுதி என்பதால் லட்சத்தீவை தீவிரமாக கண்காணிக்க சில சீர்திருத்த நடவடிக்கைகளை பிரபுல் கோடா பட்டேல் மேற்கொண்டது சிலருக்கு தற்போது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

லட்சத்தீவுக்கு மிக அருகில் "மாலத்தீவு" என்ற நாடு உள்ளது. அங்கு, சீன ஆதிக்கம் அதிகம் உள்ளது. நமது நாட்டின் எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கையிலும், சீனாவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், இந்தியாவிற்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்திலும், லட்சத்தீவை கலங்கரை விளக்கமாக (Light House) பயன்படுத்த சில அதிரடி நடவடிக்கைகளை பிரபுல் கோடா பட்டேல் மேற்கொண்டார்.

Prevention of Anti-social Activities Act (PASA) - சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்:

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய இந்த சட்டம் பயன் படுத்தப்படும். தவறு செய்பவர்கள் மட்டுமே பயப்பட வேண்டுமே தவிர தவறு செய்யாதவர்கள் இந்த சட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. தவறு செய்யாதவர்கள் நிச்சயம் கைது செய்யப்படாத போது, இந்த சட்டத்தை கண்டு அவர்கள் ஏன் பயப்பட வேண்டும் என்பது புரியாத புதிராகவே உள்ளது?!

Lakshadweep Regulation Authority - லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை விதி:

ராணுவத்தினர் பயன் படுத்தப்படும் இடங்களைத் தவிர்த்து, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கலாம்.

2018ம் ஆண்டு "கவாரட்டி" என்ற லட்சத்தீவின் தலைநகரம், ஸ்மார்ட் சிட்டி (Smart City) என்ற திட்டத்திற்கு, இந்திய அரசால் தேர்ந்து எடுக்கப்பட்டது. இதன் மூலமாக, பல கோடி முதலீட்டில், லட்சத்தீவின் தலைநகரான கவாரட்டியில், நவீன வசதிகளுடன் நெடுஞ்சாலைகள், பலத்தரப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், அங்கு வாழும் மக்களுக்கு, நிறைய வசதிகள் கிடைக்கும்.

நிலத்தை கையகப்படுத்தும் கமிட்டியில், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஊரை முன்னேற்ற வேண்டும் என நினைக்கும் ஒரு அரசை, யாராவது கேள்வி கேட்பார்களா? அவ்வாறு செய்யும் அரசை, போற்றிப் புகழ்ந்து, பாராட்டுவது தானே, சரியாக இருக்கும்!

Lakshadweep Panchayat Regulation - லட்சத்தீவு பஞ்சாயத்து ஒழுங்குமுறை:

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது. எனினும், இந்த சட்டம் நடைமுறை படுத்துவதற்கு முன்னர் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள், தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். இந்த சட்டத்தை, நிறைய பேர் எதிர்க்கின்றார்கள்.

இது போல சட்டம், ஏற்கனவே ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், கர்நாடகா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது.

மேலும், இந்த சட்டத்தின் மூலம் 50 சதவீத தொகுதிகள், பஞ்சாயத்து தேர்தலில், பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள் என்பதே நிதர்சனம்.

Lakshadweep Animal Preservation Regulation - லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை:

விலங்குகளை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், மீன், கோழி போன்ற மற்ற இறைச்சிகள் தாராளமாகவே கிடைக்கும்.

போர்க்கப்பலில் லட்சத்தீவிற்கு சுற்றுலா சென்ற காங்கிரஸ் பிரதமர்:

1988 ஆம் ஆண்டு, ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக, அன்றைய பாரதப் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், 1987 ஆம் ஆண்டு வருட இறுதியில் லட்சத்தீவிற்கு, இன்பச் சுற்றுலா சென்றார்.

"ராஜீவ்காந்தி ஏற்பாடு செய்த புத்தாண்டு விருந்தில், அவரது மனைவி சோனியா மற்றும் பிள்ளைகள் ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவின் தாய், அவரது சகோதரி, அவரது பிள்ளைகள், சோனியாவின் ஜெர்மன் தோழி என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்தப் பயணத்திற்காக, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள், தனது சொந்த டாக்ஸியை போல, ஐ.என்.எஸ் விராட் போர் விமானத்தை பயன்படுத்தினார்", என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குற்றம் சாட்டியது, நமக்கு நினைவில் இருக்கும்.

மற்ற பிரதமர்களை போல, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், லட்சத்தீவிற்கு இன்பச் சுற்றுலா செல்லாமல், நமது நாட்டின் நலன் கருதி, நாட்டின் முன்னேற்றத்திற்காக, நமது நாட்டை அன்னியர்களிடம் காக்க, பாரத பிரதமர் மோடி அவர்கள், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அவற்றின் ஒரு அங்கமாக, லட்சத்தீவைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைக்கு, ஆதரவு அளிக்க வேண்டியது, நமது ஒவ்வொருவரின் அத்தியாவசிய கடமையாகும்.

அந்நியர்களிடம் இருந்து தமிழர்களின் உதவியால் மீட்கப்பட்ட லட்சத்தீவை காக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.

குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரையே சாரும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News