கச்சத்தீவை கட்டாயம் பா.ஜ.க மீட்கும் - உறுதியளித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவை பிரதமர் மோடி கட்டாயம் மீட்டு தமிழக மீனவர்களுக்கு கொடுப்பார், இதில் பா.ஜ.க. உறுதியுடன் இருக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோட்டில் பா.ஜ.க. நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கச்சத்தீவு, பஞ்சு விலையேற்றம், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேசினார்.
பா.ஜ.க., தமிழ் மொழியை மிகவும் உயர்வாக மதிக்கிறது. பிரதமர் மோடி சமஸ்கிருதத்தைக் காட்டிலும், தமிழ்மொழி உயர்வானது என்று கூறியுள்ளார். எனவே இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு புகுத்துவதாகக் குற்றம்சாட்டுவது தவறானது. மேலும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கூட இந்தியாவை உயர்வாக நினைக்கிறது. விரைவில் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறி வருகிறது.
அது மட்டுமின்றி காங்கிரஸ், தி.மு.க. தாரை வார்த்த கச்சத்தீவை மீட்பதில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தீவிரமாக உள்ளது. எனவே அதுதான் எங்களின் கொள்கையும் ஆகும். விரைவில் இந்த விவகாரத்தில் மீனவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: One India Tamil