Kathir News
Begin typing your search above and press return to search.

10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: அண்ணா எழுதிய நாடகத்தின் தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது! - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை!

தமிழக அரசு பணிகளில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டு ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்தது. இதனால் நேற்று முதல் வடதமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கங்கள் சாலை மறியல் மற்றும் அறவழியில் ஆர்ப்பாட்டங்களை முன்வைத்து வருகின்றனர்.

10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: அண்ணா எழுதிய நாடகத்தின் தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது! - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  2 Nov 2021 5:48 AM GMT

தமிழக அரசு பணிகளில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டு ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்தது. இதனால் நேற்று முதல் வடதமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கங்கள் சாலை மறியல் மற்றும் அறவழியில் ஆர்ப்பாட்டங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இடஒதுக்கீடு ரத்து பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மனு நீதி சோழனின் சிலை அமைந்துள்ள அந்த வளாகத்தில் நீதி வழுவிய தருணங்களும் பல உண்டு. அத்தகைய தருணங்களின் பட்டியலில் வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு எழுதப்பட்ட தருணமும் இப்போது புதிதாக சேர்ந்திருக்கிறது.


தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயம் மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்பது உண்மை. அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ளனர் என்பதும் உண்மை. ஆனாலும் அவர்களின் சமூகநீதியை மறுத்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்குப் பெயர் என்ன?

வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்பது நிறுவுவதற்காக 7 வினாக்களை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அவற்றுக்கு தமிழக அரசுத் தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வினாக்களுக்குள்ளாகவே ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. வினாக்கள் விடை தேடுவதற்காக எழுப்பப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, விடையை நியாயப்படுத்துவதற்காக வினாக்கள் தயாரிக்கப்பட்டதாகத் தான் தோன்றுகிறது.

--------------

7 வினாக்கள்

--------------

சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 வினாக்களைப் பார்ப்போம்...

1. 2018-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102-ஆவது திருத்தமும், 2021-ஆம் ஆண்டில் 105-ஆவது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா?

2. ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா?

3. அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?

4. சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?

5. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?

6. வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா?

7. எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா?

இந்த வினாக்களில் பல வினாக்களுக்கு பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றத்தாலும், உயர் மன்றங்களாலும் விடைகள் காணப்பட்டிருக்கின்றன. அந்த விடைகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நமது தரப்பு வழக்கறிஞர்களால் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதைக் கருத்திக் கொள்ளாமலேயே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நீதித்துறை இதுவரை கண்டிராத விந்தை ஆகும்.


--------------

முதல் வினா

சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள முதல் வினாவுக்கான விடை மிகவும் எளிதானது. 102-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திருத்தம் ஆகும். அதே நேரத்தில், இந்த திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் மே 5-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 105-ஆவது திருத்தம் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது தான் அந்தத் திருத்தத்தின் நோக்கம் ஆகும்.

102-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி 340 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருந்தது. அப்பிரிவு மத்திய ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது தொடர்பானது தானே தவிர, இச்சட்டத் திருத்தத்தால் மாநில அரசுகளில் அரசுகளின் அதிகாரம் எந்த வகையிலும் பறிக்கப்படவில்லை என்பதை விளக்குவது தாம் 105-ஆவது திருத்தத்தின் நோக்கம் ஆகும். அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சட்டத் திருத்தங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

அதுமட்டுமல்ல.... வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள். அப்போது 102-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. அதனால், 102-ஆவது திருத்தம் வன்னியர் இட ஒதுக்கீட்டை எந்த வகையிலும் பாதிக்காது.


--------------

இரண்டாவது வினா

ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா? என்பது தான் உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது வினா.

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான சட்டம் 1993-94 ஆவது ஆண்டில் இயற்றப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் 2008-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் பிற்படுத்தப் பட்ட வகுப்பில் தலா 3.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டது. ஆனால், இந்த இரு நிகழ்வுகளிலும் ஒன்பதாவது அட்டவணையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலும் பெறப்படவில்லை.

2009-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போதும் ஒன்பதாவது அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அவ்வாறு இருக்கும் போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் மட்டும் இத்தகைய வினாக்கள் எழுப்பப்படுவது ஏன்?

--------------

மூன்றாவது வினா

அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்பது மூன்றாவது வினா.

அரசியலமைப்புச் சட்டத்தை புறக்கணித்து விட்டு எந்தப் பிரிவுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338-பி பிரிவு என்பது 102-ஆவது திருத்தம் மூலம் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டதாகும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் வழங்குவது தான் இந்தப் பிரிவின் நோக்கம் ஆகும். மாநில அளவில் ஓபிசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் அதிகாரம் உள்ளது. அதனால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடை இல்லை.

--------------

நான்காவது வினா

சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்பது தான் நான்காவது வினா ஆகும்.

இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்குவதன் நோக்கமே சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவது தான். சமூக ஏற்றத்தாழ்வுகள் சாதியின் அடிப்படையில் தான் ஏற்படுகின்றன என்பதால், அதைப் போக்குவதற்கான இட ஒதுக்கீடும் சாதி அடிப்படையில் தான் வழங்கப்பட வேண்டும். இதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார். காகா கலேல்கர் தலைமையிலான இந்தியாவின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மண்டல் தலைமையிலான மண்டல் ஆணையம் ஆகியவையும் சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் ஈழவர்கள் எனப்படும் தனித்த சாதிக்கு 14% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நாடார்கள், விஸ்வகர்மாக்கள், தீவராக்கள் என தனிப்பட்ட சாதிகளுக்கு தனித்தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சாதி அடிப்படையிலோ, தனிப்பட்ட ஒரு சாதிக்கோ இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

--------------

ஐந்தாவது வினா

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்பது ஐந்தாவது வினா.

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரிப்பது ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமூகத்தினரின் சமூக நிலையை இறக்கியோ, ஏற்றியோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் அதே நிலையில், அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற நிலையில் வைத்து தான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனால், அவர்களின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை ஆகியவை தேவையில்லை. மூன்று பிரிவினருக்கும் அவர்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அவர்களின் மக்கள்தொகை குறித்த புள்ளி விவரம் மட்டும் போதுமானது.

தமிழ்நாட்டில் 1983-ஆம் ஆண்டில் அம்பாசங்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள்தொகையை வீடுவீடாக சென்று சேகரித்தது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவு 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அதில் இடம்பெற்றிருந்த 108 சாதிகளின் மக்கள்தொகை, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 24.64% ஆகும். அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் 13.01 மக்கள்தொகை கொண்ட வன்னியர்களுக்கு 10.50%, எம்.பி.சி மற்றும் சீர்மரபினர் மக்கள்தொகை 8.56% என்பதால் அவர்களுக்கு 7%, பிற எம்.பி.சி வகுப்பினரின் மக்கள்தொகை 3.05% என்பதால் அவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு என பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான கணக்கீட்டை இதை விட துல்லியமாக செய்ய இயலாது. அந்த வகையில் தேவையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கும், பிற சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

--------------

ஆறாவது வினா

வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா? என்பது தான் ஆறாவது வினா ஆகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகள் சம வாய்ப்பை வலியுறுத்தும் பிரிவுகள் ஆகும். ஒரே நிலையிலான வகுப்பினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எந்த வகையிலும் மீறவில்லை.

--------------

ஏழாவது வினா

எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா? என்பது தான் நீதிமன்றம் எழுப்பியுள்ள ஏழாவது வினா ஆகும்.

உயர்நீதிமன்றத்தின் இந்த வினா ஏற்கனவே எழுப்பப்பட்ட ஐந்தாவது வினாவிற்கு எதிரானது ஆகும். அந்த வினாவில் மக்கள்தொகை உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று வினா எழுப்பிய உயர்நீதிமன்றம், இப்போது அந்த புள்ளி விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று வினவுவது எவ்வளவு முரண்பாடு?

ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமூகத்தினரின் சமூக நிலையை இறக்கியோ, ஏற்றியோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் அதே நிலையில், அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற நிலையில் வைத்து தான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனால், இதற்கு எந்த நோக்கக் காரணங்களும் தேவையில்லை.

--------------

பரிசீலிக்கப்படாத வாதங்கள்

நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு அழகு என்னவெனில் வழக்கு தொடுப்பவர்களுக்கும், வழக்கு நடத்துபவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவது தான். ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் சமவாய்ப்பு வழங்கப்படவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி தாராளமாக நேரம் ஒதுக்கப்பட்டது. மொத்தம் 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் வாதிட அனுமதிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீடுக்கு ஆதரவானவர்கள் தரப்பில் வாதிடுவதற்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை.

உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள 7 வினாக்களுக்கும் நமது தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் விரிவான விளக்கங்களை எடுத்து வைத்தனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கர்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர்கள் ரவிவர்மகுமார் முன்னின்று வாதாடினார். சமூகநீதி விவகாரத்தில் அவர் வல்லுனர். கர்நாடகத்தில் எடுக்கப்படும் சமூகநீதி குறித்த அனைத்து முடிவுகளிலும் இவரது ஆலோசனை இருக்கும். கர்நாடகத்தில் அண்மையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்களில் இவர் முக்கியமானவர். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்ளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாதிட்டவர். இவருடைய பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய ஏழு வினாக்களுக்கும் அவரது வாதத்தில் பதில் இருந்தது. இரு நாட்களுக்கு தமது வாதத்தை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் முன்வைத்தார். எதிரணி வழக்கறிஞர்களும் கூட அவரது வாதங்களை தங்களை மறந்து கேட்டனர். ஆனால், இவரது வாதத்தில் இருந்து ஒரே ஒரு வார்த்தையைக் கூட நீதியரசர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

--------------

மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி - முத்தையா முதலியாரின் பெயரன்

இந்த வழக்கில் எனக்காக வாதிட்டவர் வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி அவர்கள். தமிழ்நாடு போற்றும் சட்ட வல்லுனர். சமூகநீதியில் அக்கறை கொண்டிருப்பவர். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே சென்னை மாகாணத்தில் 1927-ஆம் ஆண்டில் 100% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கம்யூனல் ஜி.ஓ.வை கொண்டு வந்த அமைச்சர் கும்பகோணம் முத்தையா முதலியாரின் பெயரன் இவர். கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட முதலமைச்சர்களால் மதிக்கப்பட்டவர்; சட்ட ஆலோசனைப் பெறப்பட்டவர். 2008-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டபோது, தமிழ்நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞராக இருந்து சட்ட ஆலோசனைகளை வழங்கியவர் மாசிலாமணி அவர்கள். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு அடுத்த படியாக மிகவும் மோசமான சமூக, கல்வி நிலையில் வாழ்பவர்கள் வன்னியர்கள் தான் என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்து வாதிட்டார்.

அவருக்கு அடுத்து, வன்னியர் சங்கம் சார்பில் வாதிட்டவர் மூத்த வழக்கறிஞர் சோமயாஜி அவர்கள். ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் வாதிட்டு வெற்றி பெற்றவர். இவரிடம் இளம் வழக்கறிஞர்களாக இருந்த பலர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உயர்ந்துள்ளனர். இவரும் அற்புதமான பல வாதங்களை நீதியரசர் முன்வைத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க.வேலு சார்பில் வாதிட்டு தரப்பில் வாதங்களை முடித்து வைத்தவர் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.இராமன். திமுக தொடங்கப்படுவதற்கு காரணமாக விளங்கிய தலைவர் வி.பி.இராமன் அவர்களின் புதல்வர். 2009-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து சட்ட ஆலோசனைகளை வழங்கியவர் இவர் தான். இவரது வாதங்களை நீதிபதிகளே கவனமாக நோக்குவார்கள். இந்த வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இவர் அளித்திருந்த பதில்கள் மிகவும் வலிமையானவை.

இவர்களுடன் மூத்த வழக்கறிஞர்கள் என்.எல். இராஜா அவர்கள் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பிலும், ஓம் பிரகாஷ் அவர்கள் மாணவர்கள் சார்பிலும் மிகச்சிறப்பான வாதங்களை முன்வைத்தார். ஆனால், மொத்தம் மூன்று நாட்களுக்கு இவர்கள் அனைவரும் முன்வைத்த வாதங்களில் இருந்து மூன்று வார்த்தைகள் கூட பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், அதன் பின்னணி என்னவாக இருக்கும்?

அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நாடகத்தின் தலைப்பு தான் நினைவுக்கு வருகிறது! இவ்வாறு அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: FaceBook

Image Courtesy: Social Media



Next Story
கதிர் தொகுப்பு
Trending News