"யுவராஜ் பச்சையப்பன் என்னும் நான்" - கண்ணீர் அஞ்சலி!
By : SG Suryah
இன்று காலை முதலே பா.ஜ.க ஆதரவாளர்கள் தங்கள் முகநூல் கணக்கை திறக்க நூற்றுக்கணக்கான அஞ்சலி பதிவுகள். யாரும் எதிர்பாராத ஒரு களப்போராளி இன்று நம்மை விட்டு விண்ணுலகம் சென்றுள்ளார். யார் இந்த யுவராஜ் பச்சையப்பன்? ஏன் கவனம் பெறுகிறார் இவர்?
இன்று காலை பா.ஜ.க எம்.எல்.ஏ-வும், தேசிய பா.ஜ.க மகளிர் தலைவருமான வானதி சீனிவாசன் அவர்களின் பதிவு இது. அவர் கூறியதை போல, வானதி அவர்களின் நிழலாக வாழ்ந்தவர் யுவராஜ் பச்சையப்பன். "எம் அக்கா" என்ற சொல்லாடல் தமிழக பா.ஜ.க-வினரிடையே மிகப்பிரபலம். கடந்த சில வருடங்களாகவே யுவராஜ் தினமும் காலையில் வானதி அவர்களின் புகைப்படத்துடன் காலை வணக்கம் சொல்ல தவறியதே இல்லை, அப்போது இடம்பெறும் "எம் அக்கா" சொல்லாடல் பின்பு மிகவும் பிரபலமடைந்தது.
இவரின் பின்னனி என்ன? யார் இவர்?
விஜயபாரதம் இதழின் பத்திரிக்கையாளராக இருக்கும் யுவராஜின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் குமார் அவர்களின் இரங்கல் பதிவில் இருந்து நமக்கு தெரிவது, செங்கம் ஊரில் பிறந்து பள்ளி படிப்பை முடித்தவர் யுவராஜ். பள்ளி காலத்திலேயே "இந்தியாவின் பிரதமராக வேண்டும்" என்ற வேட்கை கொண்டு இருந்துள்ளார். பள்ளி பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் தொடர்பு, ஏ.பி.வி.பி அறிமுகம் என ஹிந்துத்வ பயணத்தை தனது 17-ஆம் வயதிலேயே துவங்கியுள்ளார். அந்த அரசியல் வேட்கை அவரை பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையை நோக்கி அழைத்து வந்தது. முதலில் பச்சையப்பா கல்லூரியில் பி.எஸ்.சி சேர்ந்து இருந்தாலும் பொது வாழ்க்கைக்கு தன்னை அர்பணிக்க துவங்கிய அவருக்கு பல முன்னனி தலைவர்களை போலவே சட்டம் படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என விருப்பம் இருந்துள்ளது. சட்டக் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என பி.எஸ்.சி படிப்பை இடையிலேயே கைவிட்டு, சில மாதங்கள் ஆர்.எஸ்.எஸ் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.
அடுத்த ஆண்டே சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்த அவர் தன்னை ஏ.பி.வி.பி அமைப்பில் இணைத்து தீவிரமாக செயல்பட்டார். ஏ.டி.எம் மையங்களில் பேப்பர் மாற்றும் பணியை பகுதிநேரமாக செய்தார். பல கஷ்டங்களுக்கு மத்தியில் படிப்பை முடித்து, வழக்கறிஞர் பணியில் காலூன்றி தற்போது ஒரு நிறுவனத்தில் சட்டம் தொடர்பான பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
2013-ஆம் ஆண்டு முதல் தன்னை பா.ஜ.க-வில் ஈடுபடுத்தி தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவின் மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவராகவும், தற்போது மத்திய சென்னை மாவட்ட கல்வியாளர் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
வானதி சீனிவாசன் அவர்களின் அன்புத்தம்பி. கோவை தெற்கு தொகுதியில் அவர்கள் போட்டியிட்ட போது உடனிருந்து தேர்தல் வேலைகளை பொறுப்பாக செய்தவர். இந்த தேர்தல் மட்டுமல்ல, கடந்த 8 ஆண்டுகளாக வானதி அவர்களின் அனைத்து அரசியல் பயணங்களிலும், தேர்தல்களிலும், யாத்திரைகளிலும் அவர் சொன்னது போல நிழலாகவே தொடர்ந்து உடனிருந்தார்.
பா.ஜ.க தமிழ் மாநில பொருளாளர் SR சேகர் தன் முகநூல் இறங்கல் பதிவில் "யுவராஜ் பெயரில் மட்டுமல்ல நடை உடை பாவனையிலும் நீ யுவராஜ்தான் கொரோனா காலன் உன்னை கொண்டு சென்றுவிட்டான் எனும் செய்தி நெஞ்சம் வெடித்தது." என்று உருகியுள்ளார்.
"நான் இறைவனை வெறுத்த நாள் இன்று..." என்று பதிவிட்டுள்ளார் யுவராஜின் நண்பரும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவருமான ம வெங்கடேசன்.
கடைசி வரை வானதி சீனிவாசன் அவர்களின் வெற்றி செய்தியையும், பதவியேற்பதையும் காணாமலேயே சென்று விட்டார் யுவராஜ். இறைவனுக்கு அப்படி என்ன அவர் மீது வாஞ்சையோ? இன்னும் குறைந்தது 50 வருடங்கள் வாழ்ந்திருக்க வேண்டியவர். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினராக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி பல ஆண்டுகளாக போராடி வந்த அவர் "யுவராஜ் பச்சையப்பன் என்னும் நான்" என்ற வாசகங்களை தன் வாழ்நாளில் சொல்வதற்கு முன்பாகவே மறைந்து பா.ஜ.க-வினரை ஆழ்ந்த துயரத்தில் தள்ளியுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த யுவராஜ், திடீரென உடல்நிலை மோசமாகி இன்று அதிகாலை 3.30 மணிக்கு இறைவனடி சேர்ந்து விட்டார். ஓம் சாந்தி.