மனித உரிமைகள், ஜனநாயகம், தனியுரிமை : வெடிக்கும் சீன-அமெரிக்க கலாச்சார மோதல்!
By : Saffron Mom
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிலிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் ஆகியோர் சீனாவின் உயர்மட்ட டிப்ளமாட்களான யாங் ஜெயிச்சி மற்றும் வாங் யி ஆகியோருடன் அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் சந்தித்தனர்.
அங்கு ஏற்பட்ட சூடான, கடுமையான விவாதங்கள் தலைப்பு செய்திகளில் அடிபட்டது. சீனா, அமெரிக்காவை கடுமையாக தாக்கி இந்த மாநாட்டை தன் நன்மைக்காக பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவிற்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிப் பேச தார்மீக உரிமைகள் இல்லை என குறிவைத்தது சீனா.
சீன ராசிப்படி 2021 ஆம் ஆண்டு 'எருது ஆண்டு'. இது கடின உழைப்பு மற்றும் நேர்மையின் மூலம் திறனையும் செழிப்பையும் குறிக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த வேளையில் கட்சியின் வரலாற்றைப் பற்றி மக்களை 'கல்வி கற்க வைக்க' வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சியின் கீழ் மாணவர்கள் 'புரட்சி' நடந்த இடங்களுக்கு சென்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'போராட்டங்களைப்' பற்றி அறிந்து அதை பாராட்ட வேண்டும் என CCP நினைக்கிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் சாதாரண குடிமக்கள் சீனாவின் நிர்வாக முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அவர் இது குறித்து கூறுகையில், "மேலைநாடுகளில் மதிப்புகளையும் அரசியல் அமைப்புகளையும் ஏற்றுக் கொள்வது மட்டுமே சீர்திருத்தம் அல்ல. நம்முடைய பாணி சீர்திருத்தம் சீனாவில் மதிப்புகளைக் கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே அலாஸ்காவில் நடந்த மாநாட்டில் வாங் யி, 'சீனாவின் பாணி ஜனநாயகம்' என்று ஒன்றை முன்வைத்தார். இப்படி சீனா அகம்பாவத்துடன் பேசுவதற்கு , அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிளவே காரணம் என்று கூறலாம். இந்த வருட ஆரம்பத்தில் கேப்பிட்டலில் நடந்த கலவரம் குறித்து பேசிய சீன மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணையத்தின் தலைவர் சென் இக்ஸின், சீனாவின் உயர்வுக்கு சீனாவின் அரசாங்க அமைப்பு தான் காரணம் என்றும் மேலைநாடுகளின் வீழ்ச்சி அவர்களுடைய அரசியலமைப்பின் விளைவாகும் என்று கூறினார்.
"கிழக்கு உயர்கிறது மேற்கு விழுகிறது" என்று மேற்கோள் காட்டுவது, அமெரிக்கா ஓரளவிற்கு பிளவுபட்டதின் லாபத்தை அடைய சீனா ஆர்வமாக இருப்பதை குறிக்கிறது. 19வது கட்சிக் காங்கிரசில் சீனா ஒரு புதிய சகாப்தத்தின் நுழைந்ததாக ஜி ஜிங்ப்பிங் கூறினார். சீனாவின் அரசியல் அமைப்பு தான், முன்னேற்றம் அடைந்து தங்கள் சுதந்திரத்தை பேணிக் காக்க விரும்பும் நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்று தெரிவித்தார்.
இது பரவி வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளது. இது தென் ஆப்பிரிக்காவின் ஆளும் கட்சியாகும். அவர்களுடைய தொண்டர்களை பயிற்றுவிக்க ஒரு நிறுவனம் அமைக்க சீனா முயற்சித்து வருகிறது.
ஷாங்காயில் உள்ள சீனா எக்ஸிக்யூட்டிவ் லீடர்ஷிப் அகாடமியின் வழியே தலைமைத்துவ பயிற்சி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு சீனாவின் நிர்வாக நடைமுறைகள் மற்றும் மார்க்சிச கோட்பாடு ஆகியவை பாடமாக எடுக்கப்படுகிறது. டான்சானியா, ஜிம்பாவே மற்றும் நமீபியாவில் ஆளும் கட்சிகளுக்கு அரசியல் பயிற்சித் திட்டங்களை சீனா வழங்குகிறது. சீனா-ஆப்பிரிக்கா செயல் திட்டம் 2018-2021ல் சீனா கிட்டத்தட்ட ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு தொழில்சார் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் அரசாங்க பெல்லோஷிப்பை வழங்குகிறது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற நாடுகளுக்கு இடையே தொடர்புகளை உருவாக்குகிறது. அதன் சர்வாதிகார ஆட்சியின் மாதிரியை மேம்படுத்துவதற்கும் முயற்சி செய்து வருகிறது. மேலைநாடுகள் அடிக்கடி ஆப்பிரிக்காவை மனித உரிமை மீறல்களுக்காக கண்டித்து வருவதால் சீனாவுக்கு அந்நாடுகளில் மவுசு அதிகரித்து வந்துள்ளது.
மனித உரிமைகள் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையில் ஒரு முக்கியமான அம்சமாகும். மனித உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு அமெரிக்காவிற்கு இருக்கும் தார்மீக உரிமைகளை மழுங்கடிக்க சீனா முயற்சித்து வருகிறது.
அலாஸ்கா மாநாட்டின் பொழுது இந்த கவுன்சில் அமெரிக்காவின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீது காட்டப்படும் இனப்பாகுபாடு, முஸ்லிம் அகதிகளுக்கு நேரும் கொடுமை ஆகியவை 'வெள்ளை மேலாதிக்கத்தின்' காரணமாக நடைபெறுவதாக குற்றம்சாட்டினர்.
மேலும் தீவிரவாதத்தை தடுப்பதாகக் கூறிக்கொண்ட அமெரிக்காவின் போர்களினால் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாகவும், 21 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் கண்டித்தனர். சமீபத்தில் ஆசியர்களுக்கு எதிராக நடக்கும் வெறுப்புக் குற்றங்களையும் கண்டித்தனர்.
அப்போதைய சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பனிப்போரில் அமெரிக்காவின் வெற்றிக்கான ஒரு முக்கியமான காரணி, அதன் அரசியல் அமைப்பு மற்றும் மதிப்புகள் ஆகும். சீனா, தற்பொழுது நடந்துவரும் போராட்டத்தில் தங்களுடைய கலாச்சார மற்றும் அரசியல் மதிப்புகள் உலகம் முழுவதும் பரப்பி, அமெரிக்காவை ஒரு 'தீய சாம்ராஜ்யம்' என்றும் வர்ணித்து வருகிறது. ஜனாதிபதி ஜோ பிடனும் அமெரிக்காவும் சீனாவை இனிமேல் பொருளாதார, ராணுவ மட்டத்தில் மட்டுமல்லாமல் கலாச்சார மட்டத்திலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை அவர்கள் எப்படி செய்யப்போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Reference: ORF