Kathir News
Begin typing your search above and press return to search.

கையில் பத்மஸ்ரீ விருது... கண்களில் ஆனந்த கண்ணீர்... பாலம் கல்யாணசுந்தரம் ஐயாவை பற்றி உருக்கமாக பதிவிட்ட S.G.சூர்யா!

இந்திய அரசால் தமிழ்நாடு சேர்ந்த பாலம் கல்யாண சுந்தரம் ஐயாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

கையில் பத்மஸ்ரீ விருது... கண்களில் ஆனந்த கண்ணீர்... பாலம் கல்யாணசுந்தரம் ஐயாவை பற்றி உருக்கமாக பதிவிட்ட S.G.சூர்யா!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 April 2023 2:41 AM GMT

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரியாத ஒருவராக தான் இருக்கிறார் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா. இந்திய அரசினால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக பத்மஸ்ரீ விருது திகழ்கிறது. அந்த விருதுக்கு தற்போது பாலம் கல்யாணசுந்தரம் ஐயா சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். 13 ஆண்டுகள் ஐயாவுடன் நெருக்கமாக பழகி, ஐயாவை பற்றி புத்தகத்தை எழுதி வெளியிட்ட SG.சூர்யா அவர்கள் ஐயாவைப் பற்றி தற்போது உருக்கமான பதிவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். குறிப்பாக "எண்ணம் போல் வாழ்க்கை… நானும், பாலம் கல்யாணசுந்தரம் ஐயாவும், பத்மஶ்ரீ விருதும்" என்ற தலைப்பில் இந்த பதிவு அமைந்து இருக்கிறது. இந்த ஒரு பதிவை நீங்கள் படிப்பதன் வாயிலாக ஐயா எத்தகையவர் என்பதை நீங்கள் உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

அந்த ஒரு பதிவு உங்களுக்காக இங்கே, வாழ்கையில் ஏதோ சாதித்தது போன்ற மனநிறைவான நாள் நேற்று (05.04.2023). நான் கோவை PSG கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்துக்கொண்டு இருந்த போது நண்பர்கள் நாங்கள் நிறுவிய சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பாக மாலை வேளை படிப்பகங்களை துவக்கி வந்தோம். மேட்டூர் பகுதியில் திரு.கேசவன் எனும் சமூக சேவகரின் கீர்த்தனா அறக்கட்டளையுடன் இணைந்து 5 படிப்பகங்களை நிறுவி 5 ஆண்டுக்காலம் தொடர்ந்து சேவை செய்தோம். மேட்டூரில் ஒரு படிப்பகத்தின் திறப்பு விழாவிற்காக 2010-ஆம் ஆண்டு சென்ற போது அந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அழைக்கப்பட்டு இருந்தார். இங்கு தான் கல்யாணசுந்தரம் ஐயாவை முதன்முதலில் சந்தித்தேன், முதன்முதலில் கேள்வியும் பட்டேன். அவர் குறித்து நிகழ்ச்சியில் செய்த அறிமுகம் என்னை தூக்கி வாரிப்போட்டது. இத்துனை சேவைகளை செய்த ஒருவரை நமக்கு தெரியவே இல்லையே என்று. சரியென்று அப்போது அவர் குறித்து Google செய்து பார்த்தபோது இணையத்தில் இரு தகவல் கூட கிட்டவில்லை. உடனடியாக அன்றைய தினமே ஐயாவின் வாழ்கையை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஐயாவின் வாழ்கையை ஆங்கிலத்தில் சுயசரிதையாக எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன். 2011 மே மாதம் வரை சென்னைக்கு 5 முறை சென்று ஐயாவுடன் தங்கி, அவரின் வாழ்கையை ஆவணப்படுத்த துவங்கினேன்.


2011-ஆம் ஆண்டு சட்டப்படிப்புக்காக பூனே குடிபெயர்ந்து விட்டேன். அச்சமையம் எனது புத்தகத்திற்கான 35% பணி மட்டுமே முடிவடைந்து இருந்தது. 2014-ஆம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்த அடுத்த தினமே புது டெல்லி குடிபெயர்ந்து அங்கு ஒரு வருட காலம் வசித்தேன். முடியாத தொடர் கதையான எனது புத்தகம் ஒரு வழியாக 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. தொடர்ந்து 3 மாதம் கல்யாணசுந்தரம் ஐயாவுடன் சென்னையில் தங்கி, பயணித்து அவரது சுயசரிதையை ஒரு வழியாக எழுதி முடித்தேன். 2016-ஆம் ஆண்டு ஜீன் மாதம் சென்னையில் கல்யாணசுந்தரம் ஐயாவின் ஆங்கில சுயசரிதை புத்தகம் “Man of the Millennium” என்ற தலைப்பில் நடிகர் சிவகுமார், காந்தியடிகளின் உதவியாளர் மறைந்த திரு.கல்யாணம், நல்லி குப்புசாமி ஐயா போன்றோர் முன்னிலையில் சிறப்பான ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் வெளியானது.

ஐயாவுடன் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நான் பயணித்து விட்டேன். ஐயாவின் சமூக பணியை முழுவதுமாக அறிந்துள்ள நான் ஐயா இந்நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை தீர்க்கமாக நம்புபவன். ஊடக புகழோ, விருதுகளோ, செல்வமோ அவரை ஒரு நாளும் ஈர்த்ததில்லை. கோடிகளை அள்ளி கொடுத்து சேவை செய்தவராக இருந்தாலும், இன்றும் மிக சாதரணமாக வாழ்பவர். பத்மஶ்ரீ விருதுக்கு நான் அவர் பெயரை பரிந்துரை செய்கிறேன் என அனுமதி கேட்ட போதெல்லாம் திட்டவட்டமாக மறுத்து விட்டார். 2021-ஆம் ஆண்டு முதன்முறையாக அவருக்கு தெரியாமல் பத்மஶ்ரீ விருதுக்காக அவரது பெயரை பரிந்துரை செய்து விண்ணப்பத்தை சமர்பித்தேன். 2022-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் ஐயாவின் பெயர் இடம்பெறவில்லை.

பிரதமர் மோடி அரசில் நிச்சயமா ஐயா போன்ற தகுதியுள்ளவர்களுக்கு விருது கிடைக்கும் என 2022-ஆம் ஆண்டு மீண்டும் பத்மஶ்ரீ விருதுக்கு விண்ணப்பித்தேன். எண்ணம் போல் வாழ்க்கை. என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை, ஐயாவுக்கு முதன்முதலில் இந்திய அரசின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவரால் நம்பவே முடியவில்லை. நேரில வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்து மகிழ்ந்தோம். பத்மஶ்ரீ விருது பெற்றதற்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. இந்திய அரசு அவரை அங்கீகரித்துள்ளது என்ற மகிழ்ச்சி தீர்க்கமாக இருந்தாலும், விருதுகளில் பெரிதாக விருப்பமில்லாதவர் என்பதால் இதை ஒரு சாதனையாக கருதவில்லை அவர்.


அனைத்தையும் விட நேற்று ஜனாதிபதி மாளிகையில் விருதளிக்கும் விழாவில் ஐயாவுடன் கலந்துக்கொண்டு அவர் விருதை வாங்குவதை நேரில் பார்த்த போது என் வாழ்வில் ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து முடித்தது போல அப்படியொரு நிம்மதி. கண்களில் ஆனந்தக்கண்ணீர். இந்த பிறவியில் எனக்கு ஆண்டவன் விதிக்கப்பட்ட ஒரு கட்டளையை, பொறுப்பை, கடமையை செவ்வனே செய்து முடித்தாற்போல ஒரு உணர்வு, மன நிம்மதி.. தமிழகத்தை விட்டு வெளியே பயணித்ததே இல்லை ஐயா. விமானம் ஏறியதே இல்லை. இவ்விரண்டையும் கொள்கையாக கொண்டுள்ளவர். பாரத பேரரசின் பத்மஶ்ரீ எனும் அங்கீகாரத்திற்காக தேசப்பற்றுடன் செவிசாய்த்து, தனது கொள்கையை தளர்த்தி புது டெல்லிக்கு விமானத்தில் வந்து பத்மஶ்ரீ விருதை மாண்புமிகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக்கொண்டார் ஐயா. என் வாழ்வில் மறக்க முடியாத, நிறைவான நாள் நேற்று(05.04.2023). அனைத்தையும் சாத்தியமாக்கிய இறைவனுக்கு நன்றி என மிகவும் உருக்கமாக எஸ்.ஜே.சூர்யா அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News