ஶ்ரீராமர் மீது அனுமர் கொண்டிருந்ததை பக்தி என்கிற ஒரு வார்த்தையில் யாரும் அடக்கி விட இயலாது !
இராமயணத்தில் ஏராளமான நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
By : G Pradeep
இராமயணத்தில் ஏராளமான நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாசம், அன்பு, பிரிவு, காதல் என ஏராளமான கதாபாத்திரங்கள் உணர்ச்சி பிளம்பாக இதில் இடம்பெற்றுள்ளனர். அந்த வரிசையில் அனுமரின் தீவிர பக்திக்கு ஏராளமான சான்றுகள் இராமாயண காதையில் உண்டு. ஶ்ரீராமர் மீது அனுமர் கொண்டிருந்ததை பக்தி என்கிற ஒரு வார்த்தையில் யாரும் அடக்கி விட இயலாது.
வார்த்தைகளுக்கும், உணர்வுகளுக்கும் அப்பாற்ப்பட்ட ஆனந்தநிலையில் அனுமர் இருந்தார். ஶ்ரீராம நாமம் அனுமருக்கு ஊனாக, உயிராக சகலமுமாக இருந்தது. அந்த வகையில் அவருடைய பக்தியை உலகறிய செய்த காட்சி இது. ராவண வதைக்கு பிறகு அயோத்தி திரும்பிய ஶ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக அயோத்தியில் நடந்தது. அந்த பட்டாபிஷேக விழாவில் அனுமரை கெளரவிக்க எண்ணினார் சீதா தேவி. ஶ்ரீராமருக்கு அனுமர் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அரிதினும் அரிதான முத்து மாலையை பரிசளித்தார் சீதா தேவி.
சீதா தேவியை உயர்வினும் உயர்வாய் நினைத்தவர் அனுமர், அன்னை அளிப்பதால் மிகுந்த மரியாதையுடன் பெற்று கொண்டு அந்த மாலையின் ஒவ்வொரு முத்து பரல்களையும் பற்களால் கடிக்க துவங்கினார். இந்த வித்தியாசமான செய்கையை கண்டு அவையில் அமர்ந்திருந்த அறிஞர்கள், அமைச்சர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைதனர். இதற்கான காரணத்தை சீதா தேவி வினவினார்.
அதற்கு அனுமர், "மரியாதை மிகுந்த அன்னையே, இந்த முத்து மாலை விலை மதிப்பற்றது. காரணம் இது புனித கரங்களான உங்கள் கரம் வழியே எனக்கு கிடைத்தது ஆனாலும் இந்த முத்து மாலையில் என் ஶ்ரீராமர் இருக்கிறாரா என்பதை நான் பார்க்க வேண்டும். ஶ்ரீராமர் இல்லாத எந்தவொரு பொருளையும் நான் வைத்து கொள்வதில்லை. ஆனால் இந்த பரல்கள் எதிலும் என் ஶ்ரீராமரை காணவில்லை "என்றார் அனுமர்.
"எனில் உனக்குள்ளும் ஶ்ரீராமரை வைத்திருக்கிறாயா "என அன்னை சீதா தேவி கேட்டதற்கு தன் இதயத்தை கிழித்து காட்டினார் அனுமர் அவர் இதயத்தில் ஶ்ரீராமர் சீதா தேவியுடன் இருந்ததை அவையோர் பார்த்து வியந்தனர். ஶ்ரீராமர் அனுமரை ஆரத்தழுவி கொண்டார். இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது ஒன்றை தான். அனுமர் வெறும் புறத்தால் ஶ்ரீராமருக்கு சேவைகள் செய்யவில்லை. அவர் ஶ்ரீராமர் மீதான அன்பை, பக்தியை உள்ளத்தில் ஸ்தாபித்திருந்தார். கடவுளின் அன்பு ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டுமே அன்றி பொருள்தன்மையிலான ஈடுபாடும், பற்றும், எதிர்பார்ப்பும் கடவுள் பக்தி ஆகாது என்கிற ஆழமான செய்தியை உலகிற்கு உணர்த்திய நிகழ்வு இது.
Image source : Pinterest, Quara