Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டில் கிருஷ்ணரின் திருவுருவச்சிலை வைத்திருப்பவரா? அவசியம் இதை படியுங்கள்.

வீட்டில் கிருஷ்ணரின் திருவுருவச்சிலை வைத்திருப்பவரா? அவசியம் இதை படியுங்கள்.

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  29 Oct 2021 12:30 AM GMT

கிருஷ்ண பரமாத்மா அன்பின் ஊற்று. கருணையின் அடையாளம் என்கின்றன சாஸ்திரங்கள். அப்பேற்ப்பட்ட கிருஷ்ணரை பலரும் திருவுருவச்சிலையாக வீட்டில் வைத்து வணங்குகின்றனர். மற்ற திருவுருவங்களை வைப்பதற்கும், கிருஷ்ணரின் திருவுருவத்தை வைப்பதற்கும் பல வேறுபாடுகள் உண்டு. கிருஷ்ணரின் திருவுருவம் உங்கள் வீட்டில் இருந்தால் இந்த குறிப்புகளை தவறாமல் நினைவில் கொள்ளுங்கள்.

கிருஷ்ணர் என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது புல்லாங்குழல். கிருஷ்ணரையும் கானத்தையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. அவருடைய வேணுகானத்திற்கு மயங்காத கோப்பியரும் இல்லை எந்த உயிரினங்களும் இல்லை எனலாம். எனவே, கிருஷ்ணரின் திருவுருவம் அருகே புல்லாங்குழலை வைப்பதால் பல நல்ல மனிதர்களின் உறவும், நட்பும் நம்மை நோக்கி வரும் என்பது நம்பிக்கை.

கிருஷ்ணருக்கு உகந்தவைகளில் மற்றொரு முக்கியமான அம்சம் வெண்ணை, தயிர் போன்ற பசுதரும் பொருட்கள். எனவே உங்கள் இல்லத்தில் அல்லது பூஜையறையில் வாய்ப்பும் இட வசதியும் இருந்தால் கிருஷ்ணர் திருவுருவம் அருகே ஒரு கன்றுடன் கூடிய பசுமாட்டின் திருவுருவத்தையும் வைத்து வணங்கலாம். கிருஷ்ணரின் தேஜஸ் நிறைந்த அதிரூபத்தை மேலும் பன்மடங்கு உயர்த்தியது மயில் பீலி. கண்களை மூடி கிருஷ்ணரின் திருவுருவத்தை கற்பனை செய்து பார்த்தால் மயில்பீலி இல்லாத கண்ணனை யாராலும் சிந்தித்து கூட பார்க்க முடியாது. அதுமட்டுமின்றி இல்லத்தில் மயில் இறகு வைத்திருப்பதால் வீட்டில் சுபிட்ஷமும், மகிழ்ச்சியும் கூடும் என்பது நம்பிக்கை.

வாய்ப்பு கிடைக்கிற போது அல்லது தினசரி எது சாத்தியமோ அப்போதெல்லாம் இறைவனுக்கு தாமரை மலர்களை அர்பணித்து வணங்குவது மிகவும் சிறப்புக்குரியதாகும். தாமரை என்பது சேற்றில் பல போராட்டங்களை தாண்டி வளர்ந்தாலும், தன் தூய்மையை, மணத்தை ஒருபோதும் அது இழப்பதில்லை. அதை போலவே மனிதர்களும் வரும் இடர்களின் போதும் தன்னிலை மறவாமல் எப்போதும் நல்லறத்துடன் மணம் வீசுபவராய் இருக்க வேண்டும் என்கிற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் புனித மலர் இது.

அதுமட்டுமின்றி ஏதேனும் விஷேச நாட்களில் கிருஷ்ணரின் திருவுருவத்திற்கு பிரசாதம் அல்ல்து நெய்வேத்தியம் படைக்கிற போது அதில் பசு நெய் மற்றும் கற்கண்டு இருக்குமாறு பார்த்து கொள்வது சிறப்பு.

கிருஷ்ண வழிபாட்டில் ஈடுபடுகிறவர்கள் வைஜெயந்தி மாலையை பயன்படுத்துவது வழக்கம். அதனை கையில் அணிகலனாக சுற்றி அணிந்து கொள்பவர்களும் உண்டு. கிருஷ்ணரோடு ஒரு சிலர் ராதையின் திருவுருவத்தையும் வைத்திருப்பர். இந்த திருவுருவத்திற்கு துளசியை அர்பணிக்கலாம். லட்டு கோபால் எனும் பாலகிருஷ்ணரின் சிலையை வைத்திருந்தால் வீட்டிலுள்ள சிறு குழந்தையை பராமரிப்பதை போல அதற்க் சரியான நேரத்தில் உணவளித்தல், சுத்தம் ஆகியவற்றை முறையாக செய்து பராமரிக்க வேண்டும். திருவுருவச்சிலையை தரையிலோ அல்லது படுக்கையிலோ ஒருபோதும் வைக்காதீர்கள்.

Image : herzindagi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News