மகாபாரதத்தில் அதிகம் பேசப்படாத, மிகவும் முக்கியமான கதாபாத்திரம் விதுரர் !
ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அந்த குடும்பத்திடம் இருக்க வேண்டிய 6 பண்புகள் என்ன ? என்பது குறித்து விதுரர் விளக்கியுள்ளார்.
By : G Pradeep
மகாபாரதத்தில் அதிகம் பேசப்படாத, மிகவும் முக்கியமான கதாபாத்திரம் விதுரர். அரச குடும்பத்தில் பிறந்து மாபெரும் அரசனாகும் முழு தகுதியும் பெற்ற அவர் அரச வாழ்க்கையின் மீது பற்றற்று இருந்து தன்னுடைய சகோதரர்களான பாண்டுவையும், திருதிராஷ்ட்ரரையும் அரசராக்கி பார்த்தவர். தன் காலம் உள்ளவரை ஹஸ்தினாபுர ஆட்சிக்கு மந்திரியாக பதவி வகித்து பல நல்ல அறம் வாய்ந்த கருத்துக்களை தக்க நேரத்தில் எடுத்துரைத்தவர்.
அவர் ஹஸ்தினாபுரத்திற்கு மந்திரியாக இருந்த அதே வேளையில், திருதிராஷ்ட்ரருக்கு பார்வையாக இருந்தார் எனலாம். அவருக்கும் அந்த அரசவைக்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடல்கள், அரசருக்கு அவர் எடுத்துரைத்த நல்லறங்கள், அறிவுரைகள், இராஜ தந்திரங்கள், தீர்வுகள் ஏராளம். அவையனைத்தும் விதுர நீதி என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க அந்த குடும்பத்திடம் இருக்க வேண்டிய 6 பண்புகள் என்ன ? என்பது குறித்து விதுரர் விளக்கியுள்ளார்.
ஒரு குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்க முதன் முதலில் அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை அறம் நிறைந்தவராக ஒற்றுமையை போற்றுபவராக இருக்க வேண்டும். காரணம் அவருக்கு பின்னான குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையை காப்பவராக அவரே இருப்பார். அவர் ஒற்றுமையிலிருந்து, அறத்திலிருந்தும் விலகினால் அது குடும்ப நன்மைக்கு கேடாக அமையும்.
இரண்டாவதாக வீட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உறவுகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு குடும்ப அமைதியை குலைப்பவர்கள் வீட்டின் நேர்மறை அதிர்வுகளை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே அவர்களை பறந்தள்ள வேண்டும்.
குடும்பத்தின் இளையோர்களை சிறு பிள்ளைகள் என உதாசீனப்படுத்தாமல் அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்து அவர்கள் மீதான அன்பை, அக்கறையை சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும். அவர்களை அங்கீகரிப்பதன் மூலம் குடும்பத்தின் ஒற்றுமை பலப்படும்.
குடும்பமே என்றாலும் ஒரு சிலர் மாற்று கருத்துடன் இருப்பது இயல்பு. இங்கு தான் சவாலே ஒருவர் மாற்று கருத்துடன் இருப்பது தவறல்ல, ஆனால் அது ஒரு குடும்பத்தின் வீழ்ச்சிக்கான சிந்தனையாக இருக்க கூடாது. தனிப்பட்ட அகங்காரம் காரணமாக, வீட்டின் அமைதியை ஒருவர் சீர்குலைப்பார் எனில் அவரிடம் இருந்து ஒதுங்கியிருத்தல் நலம்.
குடும்ப ஒற்றுமையை பேணும் அதேவேளையில், குடும்பத்தில் ஒருவர் சமூகத்திற்கு எதிராக செய்கிற செயலை அந்த குடும்பம் ஆதரிக்க கூடாது. இறுதியாக குடும்பத்தில் கிடைக்கிற அன்பும் பெறுகிற அன்பும் எந்தவித எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.
Image : HinduScriptures