இந்து மரபில் இறைவனுக்கு தேங்காய் உடைத்து வழிபடுவது ஏன்?
By : Kanaga Thooriga
தேங்காய் மற்ற பழங்களை போலல்ல. இந்து மரபில் மிகவும் அதிகமான முக்கியத்துவம் இதற்கு உண்டு. சமஸ்கிருதத்தில் இதற்கு ஶ்ரீ பழம் என்று பெயர். மற்றும் நரிகேலா அல்லது மகா பழம் என்றும் அழைக்கின்றனர். அதாவது கடவுளின் பழம் என்று பொருள். இந்து தெய்வங்கள்க்கு அர்ப்பணிக்கப்படும் பொருட்களில் முக்கியமானது தேங்காய். பூஜைகள் மற்றும் சடங்குகளில் இதற்கு முக்கிய இடம் உண்டு. தேங்காய் என்பது சாத்வீக தன்மை கொண்ட பழமாகும்.
காரணம், அதன் தூய்மை, பரிசுத்தமான தன்மை மேலும் அவை உடல்நிலையிலும் நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியது மற்றும் சில மருத்துவ குணங்களை கொண்டது. கடவுளுக்கு என்பதை தாண்டி பண்டிகை, விஷேசங்கள், புதிய வாகனம், வீடு என எதற்கும் இதை நாம் பயன்படுத்துவது வழக்கம்.
தேங்காயில் உள்ள மூன்று கண்கள் முக்கண் முதல்வனை நமக்கு நினைவுப்படுத்தும். ஒருகாலத்தில் பெரும்பாலான இடங்களில் பலி கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது . பலி என்பது சில சாஸ்திரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டாலும், ஓரு சிலருக்கு உயிர்களை பலி கொடுப்பதில் உடன்பாடு இருக்கவில்லை. ஆனால் அந்த சடங்கும் ஈடேற வேண்டும் என்ற சூழல் வந்த போது, ஆதிசங்கரர் பலிக்கு பதிலாக தேங்காயை மாற்றாக நமக்கு வழங்கினார் என சொல்லப்படுகிறது.
இருப்பினும் ஏன் தேங்காயை இதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழும் போது, அதில் எழும் தார்பரியம் யாதெனில். தேங்காய் மேலுள்ள நார்களும் அதனை ஓட்டிய கனமான ஓடு பகுதியும், நம் ஆசைகளால் கட்டப்பட்ட மனித தலையை குறிப்பதாகும். எனில் தேங்காயை உடைக்கும் போது, தலை உடைவதாக பொருள் கொள்ள கூடாது. ஒருவரின் தலையில் ஏறியுள்ள நான் எனும் அகங்காரம் உடைவதாக பொருல் கொள்ள வேண்டும்.
காரணம் ஆன்மீக பாதையில் ஒருவர் செல்லும் போது, எப்போது நான் எனும் அகங்காரம் அழிகிறதோ அப்போது தான் நம் விடுதலைக்கான வழி பிறக்கிறது. எனவே நமது உட்சபட்ச அர்பணிப்பாக தேங்காயை இறைவனுக்கு அளிக்கிறோம்.
ஆன்மீக ரீதியான முக்கியத்துவம் மட்டுமின்றி தேங்காயினால் பல மருத்துவ நன்மைகளும் உண்டு. தேங்காய் மற்றும் இளநீரில் உள்ள நீரானது உலகின் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு இணையான பரிசுத்த தன்மையுடன் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Image : Boldsky