அடையாற்றில் வெள்ளம் வந்தால் சென்னை விமான நிலையத்தில் அபாய ஒலி!
By : Thangavelu
சென்னை அடையாற்றில் வெள்ளம் வந்தால் விமான நிலையத்தில் தானாக அபாய ஒலி ஏற்படும் வகையில் புதிய கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தில் எல்லை என்பது அடையாற்றின் ஓரமாக அமைந்துள்ளது. சென்னையில் திடீரென்று அளவுக்கு அதிகமான மழை பெய்யத் தொடங்குகிறது. அது போன்ற சமயங்களில் சென்னை விமான நிலையமும் வெள்ளத்தால் தத்தளிக்கும் நிலைக்கு ஆளாகிறது. இதனால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் விமான சேவை முற்றிலும் தடை படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகளும் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு அடையாறு ஆற்றில் ஓடுகின்ற நீரின் அளவை தொடர்ந்து தெரிந்து கொள்வதற்காக, தானியங்கி கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீரின் அளவை தானாக பதிவு செய்து விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும். அது மட்டுமின்றி விமான நிலைய அதிகாரிகளுக்கும் குறுஞ்செய்திகள் சென்றுவிடும். சென்னையில் கனமழை பெய்யும்போது விமான நிலையத்தில் முன்கூட்டியே பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு தானியங்கி கருவி பெரும் உதவியாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Source: Dinamalar
Image Courtesy:Times Of India