8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கப்போகும் திருவொற்றியூர் குப்ப துறைமுக திட்டம் : களத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் !
The port to be established at Tiruvottiyur Kuppam will provide employment to 8,000 people" says L. Murugan
By : Muruganandham
திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்
மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு நிதியம் (FIDF) பங்களிப்பு மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் 200 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மத்திய அமைச்சர் எல். முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் திருவொற்றியூர், தரங்கம்பாடி, நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் துறைமுகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள இந்த துறைமுகத்தின் மூலம் 8,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும்.
மேலும் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை துரிதப்படுத்தி, மீனவர்கள், மீனவ விவசாயிகளுக்கான முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் அவர். மத்சய சம்பத யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
"நீண்ட கடற்கரை வளர்ச்சிக்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனுடன் கடற்பாசி பூங்காவும், தமிழ்நாட்டில் வரவிருக்கும் நாட்டின் முதல் சிறப்பு பொருளாதார பூங்காவும், மக்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும்" என்று முருகன் கூறினார். இந்த பூங்கா மீனவ பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், ஏனெனில் இது பெண் சுயஉதவிக் குழுக்கள்அல்லது சமூகம் மூலம் செயல்படுத்தப்படும்.