கங்கைகொண்ட சோழபுரத்தில் முதற்கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டவை‌ என்ன தெரியுமா?

Update: 2021-04-24 06:15 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து அங்கு பானை ஓடுகள், செப்புக் காசுகள் மற்றும் ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் இவை சோழர் கால மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக தொல்லியல் துறையினர் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்ட பணியை ஜனவரி மாதம் தமிழகத் தொல்லியல் துறை தொடங்கியது.

அப்போது சிறியரக ட்ரோன்கள் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுத்து மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் மாளிகைமேடு என்னும் இடத்தில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் இருந்த புதர்களை முதலில் அகற்றிய அதிகாரிகள் பிறகு பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகளை தோண்டி அந்த இடங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிப் பணியில் 4 அதிகாரிகள் கொண்ட குழு மற்றும் 35 தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள், செப்பு காசுகள் மற்றும் ஆணி வகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இவை சோழர் காலத்தில் மக்கள் பயன்படுத்திய பொருளாக இருக்கலாம் என்று தமிழக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட ஆய்விலேயே பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News