விவசாயிகளுக்கு, அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே சேமிப்பு கிடங்கு வசதிகள் - பிரதமர் மோடி உறுதி!

Update: 2021-03-03 02:50 GMT

சிறு விவசாயிகளை மேம்படுத்துவது, பல பிரச்னைகளில் இருந்து விவசாயத்துறை விடுபட மிகவும் உதவும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதிநிலை அறிக்கையில், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளத்துறைக்கு முன்னுரிமையுடன், வேளாண் கடன் இலக்கை ரூ.16,50,000 கோடியாக உயர்த்தியது, ஊரக கட்டமைப்பு நிதியை ரூ.40,000 கோடியாக உயர்த்தியது, சொட்டு நீர் பாசனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியது.

அறுவடைக்கு பிந்தைய உணவு பதப்படுத்துதல் புரட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்கு மத்தியில், 21ம் நூற்றாண்டில் மதிப்பை கூட்டுதல் ஆகிய இந்தியாவின் தேவைகளை அவர் வலியுறுத்தினார். இது போன்ற பணிகள் 2 அல்லது 3 சதாப்தங்களுக்கு முன்பே செய்யப்பட்டிருந்தால், நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும் என அவர் கருத்து தெரிவித்தார்.

உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்ற விவசாயம் தொடர்பான ஒவ்வொரு துறையிலும், பதப்படுத்துதலை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் வலுவாக வலியுறுத்தினார். இதற்கு, விவசாயிகளுக்கு, அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே சேமிப்பு கிடங்கு வசதிகள் இருக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.

விவசாய உற்பத்தியை வயல்களில் இருந்து, பதப்படுத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் முறையில் முன்னேற்றம் தேவை என கூறிய பிரதமர், இந்த பதப்படுத்துதல் மையங்களை விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளை விற்பதற்கான வாய்ப்புகளை விரிவாக்க வேண்டிய தேவையுள்ளது என அவர் வலியுறுத்தினார்.

''பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலக சந்தைக்கு நமது நாட்டின் விவசாயத்துறையை நாம் விரிவாக்க வேண்டும். கிராமங்களுக்கு அருகிலேயே வேளாண் தொழிற்சாலை தொகுப்புகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்'' என பிரதமர் கூறினார். இதில் ஆர்கானிக் தொகுப்புகள் மற்றும் ஏற்றுமதி தொகுப்புகள் முக்கிய பங்காற்றும் என அவர் கூறினார்.

வேளாண் பொருட்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும், தொழிற்சாலை தயாரிப்புகள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும் கொண்டுச் செல்லும் சூழலுக்கு நாம் செல்ல வேண்டும் என அவர் கூறினார். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் நமது தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் வழிகளை ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

Similar News