திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆற்றில் மிதந்து வந்த கோவில் கலசத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் கோவில் கலசம் ஒன்று மிதந்து வந்ததை அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் கண்டுள்ளனர். கோவில் கலசம் என்பதால் அந்த இளைஞர்கள் கலசத்தை மீட்டு அருகில் இருந்த காளியம்மன் கோவிலில் வைத்தனர்.
இதுதொடர்பாக அந்த இளைஞர்களிடம் விசாரித்த போது அவர்கள் மாலை 6.45 மணி அளவில் கண்ணம்பாடி கோரையாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுமார் மூன்று அடி உயரம் உள்ள கோவில் கலசம் மிதந்து வந்ததாகவும் அதனை கண்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்த பின்னர் அருகில் உள்ள காளியம்மன் கோவிலில் பத்திரப்படுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
தகவலறிந்த நீடாமங்கலம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கோவில் கலசத்தின் தொன்மையை அறிவதற்காக தொல்பொருளாய்வு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் ஆய்வுக்குப் பிறகே இந்த கலசம் செம்பாலானதா அல்லது ஐம்பொன்னாலானதா என்பது தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கோவில் கலசம் எந்த ஊரை சேர்ந்தது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கலசத்தை திருடியவர்கள் காவல்துறையிடம் சிக்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் ஆற்றில் வீசி சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆற்றில் கோவில் கலசம் மிதந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.