அரசியல்வாதிகள் உதவியுடன் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் அபகரிப்பு - அரசு நடவடிக்கை எடுக்குமா?

Update: 2021-04-14 01:00 GMT

மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இடமிருந்து மீட்க வேண்டுமென்று பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.




சேலம் மாவட்டம் பெரியகொல்லப்பட்டியில் மாரியம்மன் கோவில் ஒன்று மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் சொத்துக்களை அரசு அதிகாரிகள் உதவியோடு சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 75 வயதான சுவாமிநாத கவுண்டர் என்பவர் அறநிலை துறை வருவாய் துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவர் தனது மனுவில் இந்த மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நூற்றுக்கணக்கான பத்திரப் பதிவுகள் மூலம் கூவிக்கூவி விற்றுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருப்பதால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை மீறி அவர்கள் மீது புகார் அளிப்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்பட்டுள்ளது.




இதனால் அறநிலையத் துறை, வருவாய் துறை, சேலம் மாநகராட்சி, மின் வாரிய அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் நிலங்களை அளவீடு செய்து கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகார் சம்பந்தமாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அரசியல்வாதிகள் ஆதரவுடன் உள்ளூர் ரவுடிகள் ஆக்கிரமித்து வைத்துள்ள சம்பவம் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறையும் தங்கள் கடமையை தவற விட்ட நிலையில் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Similar News