அறநிலையத் துறையை மேம்படுத்த 5 அம்ச செயல்திட்டம் - புதிய ஆணையரால் கோவில்களுக்கு விடிவு வருமா!

Update: 2021-05-16 12:11 GMT

தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். அறநிலையத் துறைக்கும் புதிய கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஆணையர் குமரகுருபரன் அறநிலையத் துறையின் இணை,துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், புதிதாக ஐந்து அம்ச செயல்‌ திட்டத்தை கொண்டு வர இருப்பதாகவும் வாரம் தோறும் கண்காணிக்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் அறநிலையத் துறையின் செயல்பாடுகள் மேம்படும் என்றும் கூறியுள்ளார்.








அதன்படி அறநிலையத் துறையின் நிர்வாகம் முழுக்க டிஜிட்டல்மயம் ஆக்கப்பட உள்ளதாகவும் இதற்கென்று புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் கோவில்களின் சொத்துக்கள், வெள்ளி மற்றும் தங்கப் பொருட்கள் உள்ளிட்டவை பற்றிய தகவல்கள் டிஜிட்டல் வடிவமாக்கப்படும் என்றும் கோவில் நிலங்களுக்கு அடையாளத் தலைப்பு வைக்கப்படும் என்றும் குமரகுருபரன் கூறியுள்ளார்.

மேலும் கோவில் நிலங்களை இணையதள உதவியுடன் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவற்றில் ஆக்கிரமிப்பில் இருப்பதை மீட்பதோடு அவற்றின் மூலம் வருவாயை அதிகரிப்பது குறித்தும் திட்டமிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த செயல் திட்டம் கோவில்களின் வருவாயைப் பெருக்கி நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சி என்பதால் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

செயல் திட்டம் தொடர்பான வழிமுறைகள் தலைமைச் செயலகம் வாயிலாக அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் அனைவரும் அவற்றைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத் துறை சார்பில் உணவு‌ பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறிய நிலையில், திமுகவினர் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்வை கட்சி நிகழ்ச்சி போல் நடத்துவது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணையர் குமரகுருபரன் அது போன்று இல்லாமல் நியாயமாக செயல்பட்டு கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News