பழங்குடி சிறுவர்களுக்கு உதவ முன்வந்த மாளவிகா மோகனன் - குவியும் பாராட்டுக்கள்!
நடிகை மாளவிகா மோகனன் கேரளா பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்பதற்காக புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.
தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன், பின்னர் விஜயுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்த பிறகு முன்னனி நடிகையானார். தற்பொழுது தனுஷுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்பதற்காக புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், "இது 2015 ஆம் ஆண்டில் நான் முதன்முதலில் வயநாட்டில் உள்ள பழங்குடி மக்களைக் காணச் சென்றது முதல் எனது இதயத்திற்கு மிக நெருக்கமாக இருந்து வந்தது.
அவர்கள் கல்வி கற்கவும், அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவும் நான் உதவ விரும்புகிறேன். அடிப்படை சுகாதார மற்றும் கல்வி வாய்ப்பு கூட இல்லாமல் வறுமையில் வாடும் இந்த சமூகத்தினருக்கு நான் உதவ விரும்பினேன்.
கேரளாவின் வயநாடு, ஒடப்பள்ளம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் தேவைப்படுகிறது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள 22 பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்க ஒரே வழி ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே. உங்கள் நன்கொடைகள் மூலம், ஒவ்வொரு பழங்குடி சமூகத்திற்கும் குறைந்தது 1 லேப்டாப் மற்றும் 1 ஸ்மார்ட்போனை நாங்கள் வழங்க முடியும், இது மொத்தம் 221 மாணவர்களுக்கு பயனளிக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சாதனம் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் கனவு, ஆனால் 10 குழந்தைகளுக்கு 2 சாதனங்கள் கூட ஒரு சிறந்த தொடக்கமாகும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருப்போம். நீங்கள் நன்கொடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.