அன்புச்செல்வன் பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் சென்று முறையிட்டுள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன்.
கவுதம் மேனன் நடிக்கும் அன்புசெல்வன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் பா.ரஞ்சித் வெளியிட்டார். இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று கவுதம் மேனன் கூறியதை தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவை நீக்கினார் பா.ரஞ்சித். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் படக்குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார் மனு அளித்துள்ளார். அதில், "ஜெய் கணேஷ் இயக்கத்தில் வினா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு 2018ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு படத்தின் பணிகள் நடக்கவில்லை. தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர்.
ஒப்பந்தத்தை மீறி, படத்தின் தலைப்பு, இயக்குனரை மாற்றி அன்புசெல்வன் என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.