தமிழ் திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவுசெய்த 'தல' : ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Update: 2021-06-04 07:45 GMT

அஜித் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.


தமிழ் சினிமாவின் 'பெஸ்ட் ஓப்பனிங் ஹீரோ', ரசிகர்களால் 'தல' என போற்றப்படுபவர் அஜித்குமார். எந்த சூழ்நிலையிலும், எந்த போட்டியாளர்கள் படம் வெளியானாலும் இவரின் படங்கள் அமோக வரவேற்பை பெறும். தன் ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும் அதிகளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இந்திய அளவில் இவர் மட்டுமே.

இன்றுடன் தல அஜித்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது.

1993ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் அஜித். அப்பொழுதே பலரின் கவனத்தையும் ஈர்த்தவர்.


பின்னர் சில படங்கள் நடித்திருந்தாலும் இவரை கதாநாயகனாக ஒரு உயரத்தில் அமர்த்தியது வஸந்த் இயக்கத்தில் வெளியான 'ஆசை' திரைப்படம். படம் முழுக்க துருதுருவென வலம் வரும் அழகான இளைஞராக நடித்திருப்பார். பின்னர் அவரை ஏ.பி.சி என அனைத்து சென்டர்களுக்கும் கொண்டு சேர்த்த படம் அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த 'காதல்கோட்டை'.

பின்னர் 1999'ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான 'வாலி' படம் இவர் சினிமா பயணத்தின் முக்கிய படமாகும். அதுவரை நல்ல கதாபாத்திரமாக வலம் வந்த அஜித் அப்பொழுதுதான் பெண் பித்தனாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.


பின்னர் 2001'ம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'தீனா' இவரை ஆக்ஷன் ஹீரோ'வாக உயர்த்தியது. இந்த படத்தில் கதாநாயகன் தீனதயாளனை எல்லோரும் 'தல' என்று அழைப்பதே பின்னாளில் அனைத்து ரசிகர்களும் 'தல' என அழைப்பதற்கு காரணமே.

பின்னர் இவரின் சினிமா பாதை பல ஏற்ற இறக்கங்களை கண்டாலும் இன்று இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளத்துடன் வலம் வருகிறார்.

Similar News