"மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க" - கூட்டணி கட்சி எம்.பியை ஒருமையில் பேசிய கே.என்.நேரு வருத்தம் தெரிவித்தார் !
மதுரையில் வெங்கடேசன் என்ற எம்பி ஒருவன் இருக்கிறான். அவனிடம் கேளுங்கள் என்று நேரு பதில் அளித்துள்ளார்.
திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான கே.என்.நேரு நகராட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மதுரை விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், எம்பி வெங்கடேசனை ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த கேள்வியை சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்… மதுரையில் வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான் அந்த ஆள் கிட்ட இந்த கேள்வியை கேளுங்கள் என்று பேசியுள்ளார்.
அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லை. மாறாக சம்பத்நதப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள்.
மதுரையில் வெங்கடேசன் என்ற எம்பி ஒருவன் இருக்கிறான். அவனிடம் கேளுங்கள் என்று நேரு பதில் அளித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட கூட்டணி கட்சியின் எம்பியை ஆளுங்கட்சி அமைச்சர் பொதுவெளியில் இவ்வாறு பேசியது கண்டனத்திற்கு உரியது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு தனது ட்விட்டர் பதிவில், பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.