உத்திரப்பிரதேசத்தில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது பாய்ந்தது தேச துரோக வழக்கு !
நடந்து முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மூன்று மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் பிச்பூரி பகுதியில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் இந்தியாவை சிறுமைப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அந்த மூன்று மாணவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கடந்த திங்களன்று சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூவரும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஜக்தீஷ்புரா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மத மோதலை தூண்டும் விதமாக செயல்பட்டது (153 ஏ), 2008 ஐடி சட்டப்பிரிவு, சைபர் தீவிரவாதம் (66 எஃப்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தேச துரோக வழக்கும் பாயும் என தகவல்கள் கிடைத்துள்ளன.