இனி யாரையும் நம்பியிருக்கத் தேவையில்லை! உலகில் ஐந்து நாடுகள் மட்டுமே வைத்துள்ள தொழில்நுட்பம் இந்தியா வசமானது!
ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான மனிதர்களுடன் கூடிய சமுத்ரயான்
கடலடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான நீர்மூழ்கி கலத்தைப் பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்த முக்கிய தொழில்நுட்பம், ஆழ்கடலில் 1000 முதல் 5500 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத பாலி மெட்டாலிக் மாங்கனீஸ், கேஸ் ஹைட்ரேட்டுகள், ஹைட்ரோ-தெர்மல் சல்பைடுகள் மற்றும் கோபால்ட் போன்ற தாது வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் மத்திய புவி அறிவியல் துறைக்கு உதவிகரமாக இருக்கும்.
மனிதர்களுடன் கூடிய நீர்மூழ்கி கலமான மத்சியா 6000 –ஐ வடிவமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் நிறைவடைந்து, இஸ்ரோ, சென்னை ஐஐடி மற்றும் டிஆர்டிஓ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட அந்த கலத்தின் செயல்பாடு தொடங்கி உள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் ஒத்திகையை மேற்கொள்ள தயாராக இருக்கும்.
உலோகவியல், எரிசக்தி சேமிப்பு, கடலடி பயணம் மற்றும் உற்பத்தி வசதிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்குவதுடன் மேலும் திறமையான, நம்பகமான, பாதுகாப்பான, மனிதருடன் கூடிய நீர்மூழ்கி கலனை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்.
20 ஆண்டுகளில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், ஆளில்லா ரோபோ கலன்கள் உருவாக்கப்பட்டது மற்றும் 6000 மீட்டர் செயல் திறன் கொண்ட அமைப்புகள் குறித்தும் மத்திய புவி அறிவியல் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். இத்துறையின் தேசிய கடலியல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மனிதருடன் 6000 மீட்டர் ஆழம் வரை சென்று ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய நீர்மூழ்கி கலனை உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளனர். மனிதருடன் கூடிய நீர்மூழ்கிக் கலன் 3 நபர்களை 2.1 மீட்டர் விட்டம் கொண்ட டைட்டானியத்தாலான கோள வடிவிலான கலன் 12 மணி நேர வரை செயல்படும் திறன் கொண்டதாக இருப்பதுடன் அவசர நேரத்தில் 96 மணி நேரம் வரை உதவி அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.