உத்திரகோசைமங்கை கோவிலில் இருக்கும் பிரம்ம தீர்த்தக் குளத்தில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் கோவில் குளத்தை உடனடியாக சுத்தப்படுத்தி குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஐந்தரை அடி உயரம் உயரமுள்ள விலை மதிப்பிட முடியாத மரகத நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் திருவாசகத்தில் 38 இடங்களில் இடம்பெற்ற பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி இந்த கோவிலுக்கு வரும் போது பிரம்ம தீர்த்தக் குளத்தில் புனித நீராடிச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது கோவிலை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவு நீர் தெப்பக்குளத்தில் சேர்கிறது. இதனால் இந்த தெப்பக்குளம் தனது புனித தன்மையை இழந்து வருவதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கோவிலுக்கு அருகே தனியார் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் தெப்பக்குளம் கழிவுநீர் குளமாக மாறி வருகிறது என்று அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் குளத்தில் கழிவு நீர் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: News J