பா.ஜ.க. வில் உழைப்பவர்களுக்கு எத்தகைய பதவியும் கிடைக்கும்!

Update: 2021-07-07 14:20 GMT

தமிழக பாஜகவில் உழைப்பவர்களுக்கு எத்தகைய பதவியும் கிடைக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கரு.நாகராஜன் பாஜகவில் உழைப்பவர்களுக்கு எத்தகைய பதவியும் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இல்லை என்ற தவிப்பு அனைவரிடத்திலும் இருந்தது. இதனை போக்குவதற்காக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பில் எல்.முருகன் நியமிக்கப்பட்டார்.

எல்.முருகன் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். மேலும் பாஜகவின் செல்வாக்கும் முன்பை விட அதிகரித்தது என்ற கருத்து நிலவியது. கடவுள் முருகனின் கந்த ஷஷ்டி கவசத்தை இழிவாகப் பேசிய கருப்பர் கூட்டத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தி திமுக தலைவரையே கையில் வேலை எடுக்க வைத்தார் எல்.முருகன். மத்திய அமைச்சரவை விரிவாகத்தில் அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பாஜகவினர் எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Similar News