பெயருக்காக அடித்துக் கொண்ட முஸ்லிம் கட்சியால் சென்னையில் பரபரப்பு!

Update: 2021-07-15 06:47 GMT

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை பயன்படுத்துவது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தலைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சென்னை மண்ணடியில் உள்ள அதன் அலுவலகம் சூறையாடப்பட்டு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாபநாசம் எம்எல்ஏ மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவஹிருல்லா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் ஜவாஹிருல்லாக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக ஹைதர் அலிக்கு எதிரான தீர்மானத்தை பொதுக்குழு நிறைவேற்றியது.

இதற்கிடையில், ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வர்த்தக முத்திரை சட்டம், 1999 இன் கீழ் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற பெயரை பதிவு செய்ய முயன்றனர். பின்னர் சென்னையின் மண்ணடியில் புதிய அலுவலகத்தையும் திறந்து அங்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற பலகையை வைத்தனர். இதைத் தொடர்ந்து ஹைதர் அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஜவஹிருல்லா காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆனால் பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் பலகையை அகற்ற முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் இரவில் ஹைதர் அலியின் அலுவலகத்திற்குச் சென்றபோது இரு கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம் வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதலின் போது மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் ஹைதர் அலி புதிதாக அமைத்த பலகையை உடைத்து அவரது அலுவலகத்தை சூறையாடினர்.

இதனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் விரட்டியடித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் காயமடைந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அதன் தலைவர் ஜவாஹிருல்லாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Similar News