புனரமைப்பு செய்யாமல் அழிந்துவரும் கோவில்கள் -அலட்சியத்தில் அறநிலையத்துறை?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பு மேற்கொள்ளாமல் இருப்பதால் சிதிலமடைந்து அழியும் தருவாயில் இருப்பதால் உடனடியாக புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விநாயகர் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், பொங்காளியம்மன், மாகாளியம்மன், அருளானந்த ஈஸ்வரர், வேணுகோபால கிருஷ்ணர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தக் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான கோயில்களில் திருப்பணி செய்யாமல், கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
இந்தக் கோவில்களில் பராமரித்து வரும் சிலைகள் மற்றும் கோவில் வரலாறு அழியும் தருவாயில் இருப்பதால் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் கோவில்கள் அனைத்திற்கும் விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யாத கோவில்களை உடனடியாக புணரமைப்பு செய்து ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை உடனடியாக மீட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில் திருப்பணிக்காக பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.