தமிழக கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை - வாட்டிகனுக்கு புகார் கடிதம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரி கத்தோலிக்க தேவாலயங்களில் நிலவும் தீண்டாமை குறித்து தேசிய தலித் கிறிஸ்தவர்கள் சபை போப் பிரான்சிசுக்கும் பிற வாட்டிகன் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு மற்றும் இந்திய கத்தோலிக்க பிஷப் சபை ஆகிய அமைப்புகளும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மறைமாவட்ட பிஷப்புகளும், நேரடியாகவும் மறைமுகமாகவும் சாதிப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை தனி கல்லறையில் புதைக்க வேண்டியதிருப்பதாகவும் சர்ச் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு கல்லறைகளிலும் கூட தலித் கிறிஸ்தவர்களை தனியாக ஒரு இடத்தில் புதைக்குமாறு கட்டாயப்படுத்தபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தலித் கிறிஸ்தவர்களுக்கு என்று தனி சர்ச், கல்லறை, சவ ஊர்தி போன்றவற்றை பயன்படுத்துவது, சர்ச்சுக்கு செல்லும் பொது வழியை தலித் கிறிஸ்தவர்கள் பயன்படுத்த விடாமல் தடுப்பது, திருச்சபைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் தலித்களை நியமிக்க மறுப்பது, திருச்சபை நிர்வாக விவகாரங்களில் அனுமதி மறுப்பது என்று அடுக்கடுக்கான புகார்கள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விஷயங்களில் மாவட்ட வாரியாக தலித் கிறிஸ்தவர்களுக்கு நடக்கும் தீண்டாமைக் கொடுமை குறித்து தேசிய தலித் கிறிஸ்தவர்கள் சபை ஒரு பட்டியலை தயார் செய்துள்ளது.
'கத்தோலிக்க தலித்துகளின் மேம்பாட்டுக்கான திட்ட நடவடிக்கைகள்' என்ற பெயரில் 10 அம்ச திட்டத்தை தயாரித்து வைத்திருந்த போதும் தமிழக கத்தோலிக்க பிஷப் சபை தலித் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நீக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தலித் கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.