மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பிடிக்க முயன்ற காவல்துறை அதிகாரியின் மீது தி.மு.க. நிர்வாகி ஒருவர் காரை ஏற்றுவது போல் சென்ற காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் வருவதைப் போல் இருக்கும் இந்த காட்சி திமுக இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் மணல் அல்லி கொள்ளலாம் யாரும் தடுக்க மாட்டார்கள் அப்படி தடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி முன்பு தெரிவித்ததை போல் தற்போது தமிழகம் முழுவதும் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனால் மணல் வளம் பாதித்து விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் பலமுறை அறிவுறுத்தியும் தி.மு.க.வினர் தொடர்ந்து மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை தொண்டி சாலை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பிடிக்க முயன்ற காவலர் ஒருவர் மீது தி.மு.க. கொடி கட்டிய காரை இயக்கிய ஒருவர் காவலரை இடிப்பது போல் சென்றுள்ளார். காவலர் துரத்துவதை கண்ட லாரி ஓட்டுனர் லாரியை மின்னல் வேகத்தில் ஓட்டுவது போல் இருக்கும் அந்த வீடியோ மனதை பதற வைக்கும் விதமாக உள்ளது. வேகமாக சென்ற லாரியின் பின்னால் இருந்து திருடப்பட்ட மணல் சாலை முழுவதும் கொட்டி செல்கிறது.
பிறகு எப்படியோ அந்த லாரியை மடக்கி பிடித்த அந்த காவலரிடம் பின்னால் தி.மு.க. கொடி கட்டி வந்த காரில் இருந்து வந்தவர் செல்போனை கொடுத்து எஸ்.எஸ்.ஐ.யிடம் பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த செல்போனில் எஸ்.எஸ்.ஐ. மோகன் என்பவரிடம் தன்னை இடிப்பதை போல் சென்றனர் என்று அந்த காவலர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக லாரி ஓட்டுநர் மீதோ அல்லது பின்னால் கொடிகட்டி காவலர் மீது மோதுவது போல் வந்த காரை ஓட்டியவர் மீதோ எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது. தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே அதற்கு துணைபோவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.