பிரபல நிறுவனத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கோவில் சிலைகள்- காவல்துறையினர் அதிரடி!
சென்னையில் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த கோவில் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஆராஅமுதன் கார்டனில் உள்ள செல்வா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கோவில் சிலைகள் கடத்தப்படுவதாக சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தில் காவல்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் ஏற்றுமதி செய்வதற்காக அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் சோதனை செய்த காவல்துறையினர் மேல்மாடியில் மரக்கலைப் பொருள்களுக்கு நடுவே இரண்டு அம்மன் சிலைகள், ஒரு உலோக அம்மன் சிலை மற்றும் ஒரு கிருஷ்ணர் ஓவியம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து சிலை கடத்தலில் ஈடுபட்ட சுப்பிரமணியம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்றுமதி நிறுவனத்தில் அம்மன் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதை தடுத்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரை டி.ஜி.பி சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் ஆகியோர் பாராட்டினர். வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்த அம்மன் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைப்பற்றி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: விகடன்