இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் அலைமோதும் கூட்டம்
திருப்பதியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான அளவில் கூட்டம் ஏழுமலையானை தரிசிக்க அலைமோதுகிறது.
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது, இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி சீனிவாச தங்கும் விடுதி, பூதேவி காம்ப்ளக்ஸ், மற்றும் கோவிந்தராஜன் சாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மூலம் தரிசிக்க வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இருமடங்காக இருக்கிறது. பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல் 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருக்கின்றனர்.
நேற்றைய நாளான வெள்ளிக்கிழமை அன்று திருப்பதியில் 65,000 பேர் ஒரே நாளில் தரிசனம் செய்தனர், 33,451 பேர் முடி காணிக்கை செலுத்தினர், 4.40 கோடி ரூபாய் காணிக்கை உண்டியலில் செலுத்தப்பட்டது.