மதமாற்றத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ அமைப்பு-அதிரடி காட்டிய அரசு!

Update: 2021-12-14 12:40 GMT

குஜராத்தில் மதர் தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற அமைப்பின் கீழ் வதோதரா நகரில் செயல்பட்டு வரும் ஒரு கிறிஸ்தவ காப்பகத்தில் சிறுமிகளை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால் குஜராத் மத சுதந்திர சட்டம், 2003இன் கீழ் அந்த அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மாவட்ட சமூக பாதுகாப்பு அதிகாரி மயங்க் திரிவேதி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த காப்பகத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பஞ்சாப்பை சேர்ந்த ஒரு சிறுமி இந்த காப்பகத்தில் இருந்தபோது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக ஏற்கனவே அளித்த புகாரின் அடிப்படையிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 2021 பிப்ரவரி மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை இந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மதம் சார்ந்த நடவடிக்கைகளும் வேண்டுமென்றே இந்து மதத்தை இழிவு படுத்தும் விதமாக நடைபெற்றதும் காப்பகத்தில் இருக்கும் சிறுமிகள் கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க வற்புறுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் கழுத்தில் சிலுவை அணியச் செய்து அவர்கள் பயன்படுத்தும் அறையில் பைபிளை வைத்தும் கிறிஸ்தவ மத வழக்கங்களை கடைபிடிக்க வற்புறுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் இந்து பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ இளைஞருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், சைவ உணவு உண்ணும் சிறுமிகளுக்கு அசைவ உணவு வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

ஆனால் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி நிர்வாகம் தங்கள் காப்பகத்தில் 24 சிறுமிகள் இருப்பதாகவும் அவர்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆனால் அங்கு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் முடிவில் இந்த காப்பகத்தில் கட்டாய மதமாற்றம் மற்றும் இந்து மதத்தை அவமதிக்கும் விதமாக செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

இதனால் இந்த அமைப்பின் மீது குஜராத் மத சுதந்திரச் சட்டம் (2003) படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்டத்தின் கீழ் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூபாய் ₹ 50,000 அபராதமும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை மதம் மாற்றினால் ₹1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Indian Express

Tags:    

Similar News