கரூர் மாவட்டத்தில் பள்ளியின் முன்பு நின்று மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவ மிஷனரிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கேக் கொடுத்து குழந்தைகளைக் கவர்ந்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற முயன்ற அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு மதம் மாற்ற எளிதான இலக்காக இருப்பது பள்ளிக் குழந்தைகள் தான். அவ்வாறு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகளை மிஷனரிகள் குறி வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் தனியார் பள்ளி முன்பு கூடிய 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 கிறிஸ்தவ மிஷனரிகள் பள்ளியின் நுழைவாயில் முன்பு நின்று அங்கு பயிலும் மாணவ மாணவிகளிடம் கேக் மற்றும் புதிய ஏற்பாடு பைபிள் புத்தகத்தை கொடுத்து மத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்திய போது அவர்கள் அங்கிருந்து காரில் தப்ப முயற்சி செய்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய மக்கள் இந்து அமைப்புகளுக்கு தகவல் அளித்தனர். காரில் தப்பிச் செல்ல முயன்ற மிஷனரிகளை தடுக்கும் விதமாக ஒருவர் காரின் முன் நின்றுள்ளார். அவர் மீது ஏற்றுவது போல் காரை தொடர்ந்து ஓட்டியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினர் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அரவக்குறிச்சி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்த கரூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த மங்கலராஜ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.