தேர் செல்லும் வீதியில் இடையூறு - ஊராட்சி பணியை எதிர்த்து இந்து முன்னணி!

Update: 2021-12-23 01:30 GMT

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கோவில் தேர்த் திருவிழாவிற்கு இடையூறாக இருக்கும் மின் கம்பம் அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு இந்து முன்னணியினர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். தேர் செல்வதற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மின்விளக்குகளை சாலையின் ஓரத்தில் அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் அருகே பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான கோவிலாக விளங்கி வரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த தேர் திருவிழாவிற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல் வெளியூரைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் வந்து தரிசனம் பெறுவர்.

இந்நிலையில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் மையத் தடுப்பின் நடுவே மின் கம்பம் அமைக்கும் பணியை உடுமலை நகராட்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு சாலையின் நடுவே அமைக்கப்படும் மின் கம்பத்தினால் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமாக நடைபெறும் தேரோட்டத்திற்கு இடையூறாக இருக்குமென்று கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் சாலையின் நடுவே மின் கம்பம் அமைக்கும் பணியை உடுமலை நகராட்சி உடனடியாகக் கைவிட்டு அதற்கு மாறாக சாலையின் இருபுறங்களிலும் மின்கம்பம் நடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் உடுமலை நகராட்சி ஆணையரிடம் நேரில் சென்று சந்தித்து மனு அளித்துள்ளனர். கோவில் தேரோட்டத்தின் போது சாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் சாலையின் நடுவே மின் கம்பம் அமைப்பது எல்லா வகைகளிலும் இடையூறாக அமையும் என்பதை சுட்டிக்காட்டி பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Source : Dinamalar

Tags:    

Similar News