கோவிலுக்குள் ஆகம விதிமீறல்- அறநிலையத்துறை அதிகாரிகள் அட்டூழியம்!

Update: 2021-12-25 02:09 GMT

ஈரோடு கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றியும் கேக் வெட்டியும் பிறந்த நாள் கொண்டாடி இந்து சமய ஆகம விதி முறைகளுக்கு எதிராக செயல்பட்ட செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோவில் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் பணியில் சேர்ந்ததை கொண்டாடுவதற்காகவே கேக் வெட்டியதாக அறநிலையத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். எனினும் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய மூவராலும் தேவார பாடல் பாடப்பெற்ற முக்கியமான கொங்குநாட்டு தலமாகும். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் காவிரி ஆறானது இந்த கோவிலுக்கு அருகே திசைமாறி கிழக்கு திசை நோக்கி செல்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கோவில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த கோவிலுக்குள் அம்மன் சன்னதிக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி கேக் வெட்டி ஆகம விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோவில் செயல் அலுவலர் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 22ஆம் தேதி கோவில் முன்புறம் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக பணியில் சேர்ந்த அலுவலர் என்பதால் கேக் வெட்டியதாக கோயில் செயல் அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் முட்டைகள் அந்த கேக்கை கோவிலுக்குள் அதுவும் அம்மன் சன்னதி முன் வைத்து வெட்டியது முற்றிலும் தவறான செயல் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு கோவில்களில் மாற்று மதத்தினர் கோவில் பொறுப்புகளில் இருப்பதால் கோவில்கள் முறையாக பராமரிக்கப்படாமலும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறாத நிலையில் இருந்து வருகிறது.

தற்போது செயல் அலுவலர் ஆகம விதிகளுக்கும் கோவில் வழக்கங்களுக்கும் சற்றும் மதிப்பு தராமல் இப்படி நடந்து கொண்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருவட்டீஸ்வரன் கோவிலில் அறநிலையத் துறை அலுவலர்கள் கோவிலுக்குள்ளேயே அவர்களது காலணிகளை கழற்றி விட்டதோடு சுவாமியைபுறப்பாடு செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களின் அருகே குப்பைகளை குவித்து வைத்திருந்த செய்தி வெளியாகி இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


Source : Dinamalar, Hindu post

Tags:    

Similar News