கொடுமணல் கிராமத்தில் 2300 ஆண்டுகள் பழமையான கிணறு கண்டுபிடிப்பு!

Update: 2021-07-05 03:53 GMT

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணல் கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் பயன்படுத்திய படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை திட்ட இயக்குனர் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு மே மாதம் அகழாய்வு பணியை தொடங்கினர். பின்னர் கொரோனா பரவல் காரணமாக ஆய்வு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த இடத்தில் அகழாய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அகழ்வாய்வின் போது கொடுமணல் பகுதியில் மூன்று வகையான பெருங்கற்கால ஈமசின்னம் எனப்படும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்லறையில் மனித எலும்புக்கூடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக 2 திசைகளில் இருந்து செல்லும் வகையில் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். அந்த கிணற்றை 10 மீட்டர் நீள, அகலத்தில் 2.36 மீட்டர் ஆழத்தில் பாறைகளை குடைந்து தோண்டியுள்ளனர். இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர். இந்த கிணறு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேற்கொண்ட‌ அகழாய்வின் போது பலவகையான வளையல்களும், கண்மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரும்பு, கண்ணாடி, ஆணிகள், உளி, கத்தி போன்ற இரும்பினாலான பொருள்களும், வண்ணம் தீட்டப்பட்ட ஓடுகள், தாமிரத்தால் ஆன பொருட்கள் மற்றும் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கககண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்தியது என்று அவர் தெரிவித்தார். இந்த இடங்களில் அகழாய்வு பணியை விரைவாக நடத்தி பழங்கால தமிழர்களின் வரலாற்றை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் வெளிக் கொண்டுவர வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source: The Hindu Tamil

Similar News