₹11,000 கோடியில் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்: மோடி அரசின் மைல்கல் சாதனை!
தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் "துவாரகா" என்றும், நிகழ்ச்சி "ரோஹிணி"யில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு நிகழ்வும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் நிரம்பி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் சுதந்திர உணர்விலும் புரட்சியின் வண்ணங்களாலும் நிறைந்துள்ளது என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தேசிய தலைநகர் தில்லி இன்று ஒரு வளர்ச்சிப் புரட்சியைக் காண்கிறது என்று குறிப்பிட்டார். துவாரகா விரைவுச் சாலை, நகர்ப்புற விரிவாக்கச் சாலை ஆகியவை மூலம் தில்லி மேம்பட்ட போக்குவரத்து இணைப்பைப் பெற்றுள்ளது என அவர் கூறினார். இது தில்லி, குருகிராம், முழு தேசிய தலைநகர்ப் பகுதி மக்களின் வசதியை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்குச் செல்வது எளிதாகிவிடும் எனவும் இதனால் அனைவருக்கும் நேரம் மிச்சமாகும் என்றும் அவர் கூறினார். இந்த இணைப்பினால் வர்த்தகர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த நவீன சாலை உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக தில்லி மக்களுக்கு அனைவருக்கும் அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டின் பொருளாதாரம், தன்னம்பிக்கை பற்றி விரிவாகப் பேசியதைக் குறிப்பிட்ட பிரதமர், இன்றைய இந்தியா அதன் விருப்பங்கள், கனவுகள் தீர்மானங்களால் வரையறுக்கப்படுகிறது என்றார். இவை முழு உலகமும் இப்போது அனுபவிக்கும் அம்சங்கள் என்று அவர் கூறினார். உலகம் இந்தியாவைப் பார்த்து அதன் முன்னேற்றத்தை மதிப்பிடும்போது, அதன் முதல் பார்வை தேசிய தலைநகரான தில்லியின் மீது விழுகிறது என்று அவர் கூறினார். தில்லியை ஒரு வளர்ச்சி மாதிரியாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தைத் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். இது வளரும் இந்தியாவின் நவீன தலைநகரம் என்று அவர் கூறினார்.