தாத்தா பாட்டிகளுக்கு முககவசம் வாங்குவதற்கு உண்டியல் சேமிப்பு பணத்தை ஆட்சியரிடம் அளித்த சிறுமி - குவியும் பாராட்டுக்கள்

தாத்தா பாட்டிகளுக்கு முககவசம் வாங்குவதற்கு உண்டியல் சேமிப்பு பணத்தை ஆட்சியரிடம் அளித்த சிறுமி - குவியும் பாராட்டுக்கள்

Update: 2020-04-14 11:33 GMT

கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் தினக்கூலியை நம்பியுள்ள ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர், திருநங்கைகள், முதியோர்கள் என பலர் அன்றாட உணவிற்கு அல்லல் படும் துயர நிலை ஏற்பட்டுள்ளது.

இக்கட்டான இந்த நிலையில் மனிதநேயம் பல்கி பெருகி ஒருவருக்கொருவர் உதவுவது அதிகரித்துள்ளது. பலர் கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சர், பாரதபிரதமருக்கு நிதி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு நாராயணசாமிதெருவை சேர்ந்த 8 வயது சிறுமி மிர்துளா தன் தாயார் ராஜலட்சுமியுடன் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு ஆட்சியரை நேரில் சந்தித்து கடந்த மூன்று ஆண்டுகளாக தன் உண்டியலில் சேமித்து வைத்திருந்த மொத்த பணம் ரூ 4 ஆயிரத்து 426 ஐ ஆட்சியரிடம் வழங்கி ஆதரவற்ற தாத்தா பாட்டிகளுக்கு முககவசம் வாங்கி தருமாறு வேண்டுகோள் விடுத்தார். 4 ஆம் வகுப்பு மாணவியின் மனிதநேய உணர்வினை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பாராட்டினார்.

இது குறித்து மிர்துளா கூறுகையில் முதல் வகுப்பில் சிறுசேமிப்பு பற்றி ஆசிரியை பாடம் நடத்தியலில் இருந்து சேமிப்பில் ஆசை ஏற்பட்டது. அது முதல் சேமிக்கத்தொடங்கினேன். என் பிறந்தநாட்கள், பொங்கல் விழாக்களின் போது என் தாத்தா மற்றும் உறவினர்கள் அளித்த தொகையை செலவு செய்யாமல் சேமித்து வந்தேன்.

தற்போது பல இடங்களில் ஆதரவற்ற தாத்தா பாட்டிகள் முககவசம் வாங்க முடியாமல் கொரோனா தொற்று அபாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு முககவசங்கள் வாங்கி தருமாறு ஆட்சியரிடம் என் சேமிப்பு தொகையை அளித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்செயலுக்கு, வெளிநாட்டில் உள்ள தன் தந்தை பாலமுருகன் போன் மூலம் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 

Similar News