6 ஆண்டுகளில் ரூ. 12,000 லட்சம் கோடி மதிப்பில் 65,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள்: கலக்கும் இந்தியா!
இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் உட்பட நாட்டில் டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக் கொள்வதற்கான விகிதங்களை அதிகரிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI), நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் அரசு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீரின், 3 முதல் 6-ஆம் நிலை நகரங்கள் வரை டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, 2021 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ஒரு கட்டண உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை அமைத்துள்ளது. மே 31, 2025 நிலவரப்படி, பிஐடிஎஃப் மூலம் சுமார் 4.77 கோடி டிஜிட்டல் தொடர்பு புள்ளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆறு நிதியாண்டுகளில், அதாவது 2019-20 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை பரிவர்த்தனைகள் அபரிமிதமான அதிகரிப்பைக் கண்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 65,000 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன, இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 12,000 லட்சம் கோடியாகும்.
நாடு முழுவதும் பணம் செலுத்துதல்களின் டிஜிட்டல் மயமாக்கலின் அளவை அளவிடுவதற்காக, ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கட்டண குறியீட்டை (RBI-DPI) உருவாக்கியுள்ளது. இந்த குறியீடு அரையாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது மற்றும் மார்ச் 2018 ஐ அடிப்படைக் காலமாக (குறியீடு = 100) கொண்டது. சமீபத்திய வெளியீட்டின்படி, இந்தக் குறியீடு செப்டம்பர் 2024 இல் 465.33 ஆக இருந்தது, இது நாடு முழுவதும் டிஜிட்டல் கட்டண ஏற்பு, உள்கட்டமைப்பு மற்றும் செயல்திறனில் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
சிறு வணிகங்கள் மற்றும் எம்எஸ்எம்இகள் தங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும் டிஜிட்டல் கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வதில் ஆதரவளிக்கும் வகையில், அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய கட்டணக் கழகம் ஆகியவற்றால் அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், சிறு வணிகர்களுக்கான குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டம், எம்எஸ்எம்இகள் தங்கள் இன்வாய்ஸ்களை போட்டி விகிதங்களில் டிஆர்இடிஎஸ் தளத்தில் தள்ளுபடி செய்ய அனுமதிக்கும் வர்த்தக பெறுதல்கள் தள்ளுபடி அமைப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் கடன் அட்டை பரிவர்த்தனைகளுக்கான வணிக தள்ளுபடி விகிதத்தை (MDR) பகுத்தறிவுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.