சோதனையை சாதனையாக மாற்றிய 15 வயது மாணவி - பிரதமர் மோடியை சந்தித்தது உத்வேகம் தந்ததாக தகவல்!
சாதிக்க வேண்டும் என்ற அனால் இதயத்தில் இருந்தால் போதும் எத்தகைய சோதனையையும் சாதனையாக மாற்றிக் காட்ட முடியும் இதற்கு வாழும் எடுத்துக்காட்டாய் மாறி வருகிறார் ஒரு 15 வயது மாணவி
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் தனிஷ்கா சுஜித். வண்ண கனவுகளை நெஞ்சில் சுமக்க தொடங்கும் பருவத்தில் 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றில் தனது தந்தையையும் தாத்தாவையும் இழந்து விட்டார். படிப்பில் படு சுட்டியானவர் தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்தாக வேண்டும் என்று நினைத்தார்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் 13 வயதிலேயே 12ஆம் வகுப்பு தேர்வினை நேரடியாக எழுதி தேர்ச்சி பெற்றார். இந்தூர் தேவி அகில்யா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் இவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறப்பு நேர்வாக பி.ஏ உளவியல் படிப்பு படிக்க அனுமதி வழங்கப்பட்டது. இப்போது இவர் பி.ஏ இறுதி ஆண்டு தேர்வினை 19 ஆம் தேதி முதல் எழுத இருக்கிறார் .
இதற்கிடையே கடந்த 1ஆம் தேதி மாநிலத்தின் தலைநகரான போபாலுக்கு பிரதமர் மோடி வந்தபோது அவரை தனிஷ்கா சுஜித் சந்தித்தார். அந்த சந்திப்பு இவருக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது. இது பற்றிய அவர் மேலும் கூறியதாவது:-
பிரதமர் போபாலுக்கு வந்தபோது நான் அவரை 15 நிமிடம் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் பி.ஏ தேர்ச்சி பெற்ற பின்னர் அமெரிக்காவில் சட்டப்படிப்பு படிக்க விரும்புவதை தெரிவித்தேன். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆவதுதான் எனது எதிர்கால கனவு என்றேன்.
எனது லட்சியம் பற்றி கேட்டவுடன் பிரதமர் என்னை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வக்கீல்கள் வாதாடுவதை கவனிக்குமாறு அறிவுறுத்தினார். அதுவே எனது லட்சியம் நிறைவேறுவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று கூறினார். பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.