விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிச்சந்தையில் 4 லட்சம் டன் கோதுமை 5 லட்சம் டன் அரிசி விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கோதுமை மற்றும் அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்த சேமிப்பில் உள்ள 4 லட்சம் டன் கோதுமை மற்றும் ஐந்து லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 28- ஆம் தேதி கோதுமை மற்றும் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி அரிசிக்கான மின்-ஏலம் நடத்தப்படும் எனவும் இவற்றுக்கான டெண்டர் விரைவில் விடப்படும் எனவும் இந்திய உணவுக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அசோக் கே மீனா செய்தியாளர்களிடம் கூறுகையில் கோதுமை மற்றும் அரிசியின் சில்லரை விலையில் பணவீக்கத்தை போக்க நாங்கள் காண்கிறோம். திறந்த சந்தை விற்பனை திட்டத்தை தொடங்குமாறு அரசு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதற்கு ஏற்ப கோதுமை மற்றும் அரிசியை ஏலம் மூலம் வெளிச்சந்தையில் விற்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது .இந்த மின் ஏலத்தில் ஒரு நபர் ஏலம் எடுக்கக் கூடிய அதிகபட்ச அளவு 100 டன்களுக்கு மட்டுமே. சிறிய கோதுமை பதப்படுத்துபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்தபட்ச அளவு 10 டன் ஆக வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.