கொவிட் அவசரக் கடன் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் மத்தியஅரசு அதிரடி.!

கொவிட் அவசரக் கடன் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் மத்தியஅரசு அதிரடி.!

Update: 2020-06-09 03:02 GMT

கொவிட் அவசரக் கடன் வசதி சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அல்ல, அனைத்து நிறுவனங்களுக்கும் தான் என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் (FICCI) தேசிய செயற்குழு உறுப்பினர்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியத் தொழில்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அரசால் முடிந்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்."உங்கள் உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு பாதிப்பென்றால், ஆதரவளிக்க/தலையிட அரசு உறுதிப்பூண்டுள்ளது," என்று அவர் கூறினார்.

பணப்புழக்கத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர், "பணப்புழக்கப் பிரச்சினையை நாங்கள் நியாயமாகவும், தெளிவாகவும் கையாண்டுள்ளோம். தற்போது நிச்சயமாகப் பணப்புழக்கம் உள்ளது. ஒரு வேளை இன்னும் சிக்கல்கள் இருந்தால் நாங்கள் அதை கவனிப்போம்," என்றார். நிலுவைத் தொகைகளை செலுத்திவிடுமாறு அனைத்து அரசுத் துறையும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த  நிர்மலா சீதாராமன், எந்தத் துறையிலாவது ஏதாவது பிரச்சினை இருந்தால் அரசு அதை கவனிக்கும் என்றார்.

புதிய முதலீடுகளுக்கு 15 சதவீதம் பெருநிறுவன வரி விகிதத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அரசு பரிசீலிக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.

"என்ன செய்ய முடியுமென்று நாங்கள் பார்க்கிறோம். புதிய முதலீடுகளுக்கான 15 சதவீதம் பெருநிறுவன வரி விகிதத்தின் மூலம் தொழில்கள் பயனடைய வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். 31 மார்ச், 2023 என்னும் காலக்கெடுவை நீட்டிப்பதை பரிசீலிப்பதற்கான தங்கள் கோரிக்கையை நான் ஏற்கிறேன் என்று," நிர்மலா சீதாராமன் கூறினார்.

பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) காலக்கெடுக்கள் பற்றிய தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு தொழில்துறையினரைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜிஎஸ்டி) குறைப்பதற்கான தேவையைக் குறித்து பேசிய அவர், " சரக்கு மற்றும் சேவை வரிக் குறைப்புப் பற்றி அதற்கான குழு தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அந்தக் குழு வருவாயையும் எதிர்நோக்கியுள்ளது. எந்தத் துறையின் வரி விகிதத்தைக் குறைப்பதற்கான முடிவையும் குழு தான் எடுக்க முடியும்," என்றார்.

பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி திரும்ப அளித்தல் தொடங்கி விட்டதென்றும், ரூ 35,000 கோடி மதிப்பிலான வருமான வரி திரும்ப அளித்தல் கடந்த சில வாரங்களில் நடைபெற்றதென்றும் நிதி மற்றும் வருவாய் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார்.

பொருளாதார விவகாரங்கள் செயலாளர் தருண் பஜாஜ், பெருநிறுவன விவகாரங்கள் செயலாளர்  ராஜேஷ் வெர்மா மற்றும் நிதிச் சேவைகள் செயலாளர்  தேபாசிஷ் பாண்டா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 பாதிப்பைக் கையாள்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் செயல்படுத்துதலை ஆதரிக்க பல்வேறு அரசுத் துறைகளுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அதன் தலைவர் டாக்டர். சங்கீதா ரெட்டி தெரிவித்தார்.

"சுய-சார்பு இந்தியாவின் பொது இலக்கை அடைய இந்திய வர்த்தக மற்றும் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பு உறுதி பூண்டுள்ளது மற்றும் அதன் செயல்படுத்துதலை மேம்படுத்த அரசுடன் இணைந்து பணிபுரிகிறது," என்று டாக்டர் சங்கீதா ரெட்டி மேலும் தெரிவித்தார். 

Similar News