கோவை தொடர் குண்டுவெடிப்பு தினம் : உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

கோவை தொடர் குண்டுவெடிப்பு தினம் : உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

Update: 2019-02-14 17:32 GMT

கோவையில் நவம்பர் 29,1997 அன்று செல்வராஜ் என்ற காவலர் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்கள்தாம், 1998 பிப்ரவரி 14 அன்று, குண்டு வெடிப்புக் கலவரமாக மாறியது. நான்கு நாள்களில் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான மதிப்பில் பொருள்சேதம் ஏற்பட்டது. குண்டு வெடிப்பால் கோயம்புத்தூரை உற்றுநோக்க ஆரம்பித்தது.


நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எல்.கே.அத்வானி கோவை வருகிறார். பி.ஜே.பி வேட்பாளார் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்துப் பேச வந்த அத்வானிக்காக, கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. அவரின் விமானம் அரைமணி நேரம் தாமதமாக வந்ததால் அவருடைய உயிர் தப்பியது எனலாம். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் யாரைக் குறி வைத்து நடத்தப்பட்டது என்பதெல்லாம் வரலாறு. கலவரத்தின் ரத்தம் உறைந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. 


இந்த நிலையில், இன்று கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மொட்டையடித்தும், திதி கொடுத்தும் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று பேரூர் படித்துறை பகுதியில் 3 பேர் மொட்டையடித்தும், திதி கொடுத்தும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு இன்று மாலை அஞ்சலி செலுத்தி உள்ளனர்.


Similar News