தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் திட்டம் மீண்டும் வரும் -நிர்மலா சீதாராமன்!
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருந்தது. ஆனால் இந்த திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது .இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தேர்தல் பத்திரம் திட்டத்தை பா.ஜனதா மீண்டும் கொண்டு வரும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தி தேர்தல் பத்திரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது .இந்த விவகாரத்தில் இன்னும் நிறைய ஆலோசனைகளை செய்ய வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிப்பாக வெளிப்படை தன்மையை தக்க வைத்து கருப்பு பணம் நுழைவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக அகற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். அதே நேரம் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை .இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
SOURCE :DAILY THANTHI